

அரசுப் பேருந்துகளை மே 4-ம் தேதி முதல் இயக்கும் வகையில், போக்குவரத்துக் கழகங்கள் சுற்றறிக்கை வெளியிட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா தொற்றைக் கட்டுப்படுத்தும் வகையில் மே 3-ம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால், பேருந்து, ரயில் உள்ளிட்ட பொதுப் போக்குவரத்து முழுமையாக தடை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் சுகாதாரத் துறை பணியாளர்கள், அத்தியாவசியத் துறைகளின் பணியாளர்களுக்காக மாவட்ட நிர்வாகங்களின் அறிவுறுத்தல்படி தேவைக்கேற்ப அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மே 4-ம் தேதி முதல் பணிக்கு வரும் போக்குவரத்துக் கழக ஊழியர்களுக்கு பேருந்துகளை உரிய பாதுகாப்புடன் இயக்க, போக்குவரத்துக் கழகங்கள் சார்பில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள் ளது.
அதில், ‘‘ஊழியர்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து பணிக்கு வரவேண்டும். ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை கைகளைக் கழுவ வேண்டும். காய்ச்சல் உள்ளிட்ட கரோனா அறிகுறிகள் இருந்தால் விடுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பணியிடத்தில் சமூக இடைவெளியைப் பின்பற்ற வேண்டும். பயணிகள் முகக் கவசம் அணியாமல் இருந்தால் அவர்களை பேருந்தில் ஏற அனுமதிக்கக் கூடாது. பயணிகள் சமூகஇடைவெளியைப் பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும்’’ என்பன உள்ளிட்ட பல்வேறுஅறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள் ளன.
இதுதொடர்பாக போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘இந்த சுற்றறிக்கை மூலம் மே 4-ம் தேதி பேருந்துகள் இயக்கப்படும் என்பது அர்த்தமல்ல; ஊழியர்களுக்கான அறிவுறுத்தல்தான். பேருந்துகளை இயக்கலாம் என்று அரசு அறிவித்த பின்னர்தான் இயக்கப்படும்’’ என்றனர்.