சமூக இடைவெளியை இன்றும் கடைபிடிக்கும் காணி பழங்குடிகள்!- நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பரம்பரை அறிவு

சமூக இடைவெளியை இன்றும் கடைபிடிக்கும் காணி பழங்குடிகள்!- நோய்த் தொற்று பரவாமல் தடுக்கும் பரம்பரை அறிவு
Updated on
2 min read

கரோனா தொற்றில் இருந்து மீள அரசின் வழிகாட்டி நெறிமுறைகளை தங்கள் பாரம்பரிய அறிவினால் இயல்பாகவே ‘காணி’ பழங்குடிகள் கடைபிடிப்பது ஆச்சரியப்பட வைக்கிறது.

குமரி மாவட்டத்தின் பேச்சிப்பாறை அணையின் மறுகரையில் அடர்ந்த வனப்பகுதிகளில் தச்சமலை, தோட்டமலை, மாறாமலை உட்பட 69 காணி குடியிருப்புகள் உள்ளன. குமரி, திருவிதாங்கூர் சமஸ்தானத்தோடு இருந்த காலத்தில் மன்னருக்கு ஒரு பிரச்சினை எழுந்தது. அப்போது கானகத்தில் தஞ்சம் புகுந்த மன்னருக்கு இந்த பழங்குடிகள் அரணாக இருந்து பாதுகாத்தனர். இதற்கு நன்றி கடனாக மீண்டும் அரியணை ஏறியதும், மன்னர் இவர்களுக்கு வனப்பகுதியில் அவர்கள் இருந்த நிலங்களை தானமாக வழங்கினார்.

மன்னர் வழங்கிய நிலத்துக்கு சொந்தக்காரர்கள் என்பதால் இவர்கள் காணிக்காரர்கள் என அழைக்கப்படுகின்றனர். குமரியில் மலைப்பகுதிகளில் இருக்கும் காணி பழங்குடியினர் கரோனா அச்சத்தை உணர்ந்திருக்கின்றனரா என்பது குறித்து அறிந்து கொள்ள அங்குச் சென்றோம். அங்கே தொற்றை மிஞ்சிய அவர்களின் பாரம்பரிய அறிவு ஆச்சர்யப்பட வைத்தது.

‘கூடிநெருங்கி சேண்ணு

தேனு நடக்குமெங்கி

நீக்கம்பு புடிஞ்சும் குறுமரே

கண்டொல்லிங்...கேட்டொல்லிங்..’ என்பதாக நீள்கிறது காணி பழங்குடிகளின் பாரம்பரியமான வாய்மொழிப் பாடல். ‘கூட்டமாக சேர்ந்துசுற்றினால் நோய் வந்துவிடும்’ என்பதுதான் இதன் அர்த்தம்.

இதுகுறித்து காணி சமூகத்தில் முதல் முனைவர் பட்டம் பெற்றசுரேஷ்காணி கூறியதாவது:

ஆதிவாசிகள் தங்கள் குடியிருப்புகளை இயல்பாகவே நெருக்கமாக அமைத்துக் கொள்வதில்லை. தெரு கலாச்சாரம் எங்களுக்குக் கிடையாது. இயல்பாகவே மற்றொருவரை உடல்ரீதியாகத் தொடுவதோ, கைகுலுக்கிக் கொள்வதோ இங்கு இல்லை. பிளேக், ஸ்பானிஸ் ப்ளூ போன்றவை தந்த படிப்பினை அது.

அதேபோல், இறப்பை பெரிய சடங்காக எடுக்கும் மரபும் எங்களிடம் இல்லை. கரும்பொக்கன் என்று காணி மக்களால் சொல்லப்படும் பொக்கலங்கள் (அம்மை)காணிக் குடியிருப்புகளில் ஒருகாலத்தில் வீரியம் எடுத்தது. அப்போது வேப்பிலையை மருந்தாக்கினார்கள். அதில் குணமடையாதவர்களை மலைகளில் அப்போதே தனிமைப்படுத்தி வைத்தனர். குணமடைந்தால் குடியிருப்புகளுக்கு திரும்ப வருவார்கள். இல்லையேல் விலங்குகளுக்கு உணவானார்கள்.

வேட்டையாடும் மரபு கொண்ட காணி பழங்குடியினர் தங்கள் விளைநிலங்களிலேயே குடியிருப்பை அமைத்தனர். ஒரு வீட்டுக்கும், அடுத்த வீட்டுக்கும் இடையே இதனால் அரை கிலோ மீட்டர் தூரம்இடைவெளி இருக்கும். முன்னோர்கள் நினைத்திருந்தால் விளை நிலத்தை வந்து பார்த்து செல்லும்வகையில் தெருக்களாக குடியமர்த்தியிருக்க முடியும். ஆனால், தொற்று நோய்கள் குறித்து இயல்பாகவே அவர்களுக்கு இருந்தபாரம்பரிய அறிவும், படிப்பினையும்தான் அதற்குத் தடை போட்டது. இப்போதும் ஒரு குடியிருப்பில் அதிகபட்சம் 25 வீடுகள் தான் இருக்கும்.

எங்கள் காணிக் குடியிருப்பில் ஒருவர் தோள் மீது மற்றொருவர் கைபோட்டு நடந்தாலே பெரியவர்கள் கையை எடுக்கச் சொல்லி திட்டுவார்கள். அத்தகைய பாரம்பரியத்தில் இருந்து காணிக் குடியிருப்புகளும் மெல்ல மாறி வருகின்றன.

இப்போது கரோனா பரவலைத் தடுக்க அரசு அடிக்கடி கைகளை கழுவச் சொல்கிறது. இயல்பாகவே காணிக் குடியிருப்பில் ஒவ்வொரு வீட்டு வாசலிலும் தண்ணீர் வைத்திருப்பார்கள். கை, கால்களைகழுவிவிட்டுத்தான் வீட்டுக்குள்செல்லவேண்டும். வேட்டையாடுவதால் கைகளில் கிருமி தொற்றியிருக்கும் என்ற அச்சத்தில்தான் இப்படி தண்ணீர் வைக்கும் முறை இருந்தது. ‘காலு நனைச்சிங் (நனைத்துவிட்டு) கொண்டுவா’ என உத்தரவுபோடும் வயோதிகர்கள் இன்றும் இருக்கிறார்கள். இவ்வாறு சுரேஷ்காணி கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in