Published : 21 Apr 2020 08:31 PM
Last Updated : 21 Apr 2020 08:31 PM

மாற்றுத் திறனாளிகளின் இல்லத்துக்கே நிவாரண உதவி: குமரி மாவட்ட நலத்துறை வழங்கியது

மாற்றுத்திறனாளிகள் பலரும் தங்கள் உடல் உழைக்கும் சக்திக்கு ஏற்ப சின்னச் சின்னத் தொழில்களைச் செய்து வருகின்றனர். என்றாலும் பெரும்பாலும் விளிம்பு நிலையிலேயே இருக்கும் அவர்களை, கரோனா காலம் இன்னும் முடக்கிப் போட்டிருக்கிறது.

அப்படி ஊரடங்கால் வருவாய் இழந்து தவிக்கும் உடல் உழைப்பு சார்ந்த மாற்றுத்திறனாளிகளின் பட்டியலை சேகரித்து, அவர்களின் இல்லங்களுக்கே சென்று நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

குமரி மாவட்டத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சிவசங்கரனும் இந்தப் பணியில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கெனவே மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிவந்த நிலையில், இந்து தமிழ் திசை இணையதளத்தில் வெளியான ஆட்டோ ஓட்டுநர் ஷாஜியின் செய்தியைப் படித்துவிட்டு அவருக்கும் நேரில் போய் உதவி செய்துள்ளது மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை.

இதுகுறித்து சிவசங்கரன் இந்து தமிழ் திசையிடம் கூறுகையில், “மாற்றுத்திறனாளிகள் நலத்துறைச் செயலாளரின் வழிகாட்டுதல்படி இந்த பணியை செய்து கொண்டிருக்கிறோம். மாவட்ட நிர்வாகத்தின் மூலமும் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. எங்களைப் பொறுத்தவரை தன்னார்வலர்களின் உதவியைப் பெற்று மாற்றுத்திறனாளிகளின் இல்லத்துக்கே போய் அவர்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளை வழங்கி வருகிறோம்.

நாகர்கோவிலில் எங்களுடன் இந்த சேவையில் நாகர்கோவில் ரோட்டரி சங்கத்தினர் தன்னார்வலர்களாக இணைந்துள்ளனர். மாற்றுத்திறனாளிகளுக்கு அரிசி, பருப்பு, மளிகை சாமான்கள் ஆகியவற்றை முதல்கட்டமாக வழங்கி வருகிறோம். முதல்கட்டமாக 40 மாற்றுத்திறனாளிகளுக்கு 15 நாட்களுக்குத் தேவையான பொருள்களை வழங்கியுள்ளோம்” என்றார் .

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x