

தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவினைப் பின்பு மீட்டெடுத்து விட முடியும். உயிர் தான் முக்கியம். ஆகவே, முதல்வர் அறிவித்த மே 3 வரையிலான ஊரடங்கினை தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தொடர்ந்து கடைப்பிடிக்கும் என அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தின் ஐடி நிறுவனங்களின் உயர் அலுவலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மற்றும் உயர் அலுவலர்களுடன் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் சென்னையில் இன்று ஆலோசனை நடத்தினார். தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள மே 3-ம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிப்பது தொடர்பாக இந்த ஆலோசனை நடத்தப்பட்டது.
பின்னர் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் செய்தியாளர்களிடம் பேசியதாவது:
“ஏப்ரல் 15-ம் தேதி அன்று மத்திய அரசு வெளியிட்ட ஆணையில் ஏப் 20-க்குப் பிறகு எந்தெந்த தொழிற்சாலைகள், வணிக நிறுவனங்கள் மற்றும் இதர சேவைகள் இயங்கலாம் என்பது பற்றி மாநில அரசு முடிவெடுத்துக் கொள்ளலாம் என்று தெரிவித்திருந்தது.
தற்பொழுது உள்ள கரோனா வைரஸ் நோய்த் தொற்று பரவலினைக் கருத்தில் கொண்டு, டெல்லி, கர்நாடகா, பஞ்சாப், தெலங்கானா, மகாராஷ்டிரா, குஜராத் போன்ற மாநிலங்கள் தற்பொழுது நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தொடர்ந்து கடைப்பிடிக்க முடிவெடுத்துள்ளன.
தமிழ்நாட்டில் நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளைத் தளர்வு செய்வது குறித்து ஆராய ஏப்ரல் 16 அன்று ஒரு வல்லுநர் குழுவினை முதல்வர் நியமித்து ஆணையிட்டார். அக்குழு முதல் கூட்டத்தினை நடத்தி அதன் முதல் கட்ட ஆலோசனைகளை முதல்வரிடம் ஏப்ரல் 20 அன்று சமர்ப்பித்தது.
இந்தக் குழுவின் ஆலோசனைகள் முதல்வர் தலைமையில் (20.04.2020) நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கவனமாக ஆராயப்பட்டன. அதன் அடிப்படையில் நோய்த்தொற்று மேலும் பரவுவதைத் தடுக்க கடும் நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. இதனால் மாநில பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005-ன் படி தற்பொழுது அமலில் உள்ள ஊரடங்கு மற்றும் இதர கட்டுப்பாடுகள் அனைத்தும் மத்திய அரசு அறிவித்துள்ள 03.05.2020 ஆம் தேதி வரை தொடர்ந்து கடைப்பிடிக்க தமிழக அரசால் முடிவு செய்யப்பட்டது.
நோய்த் தொற்று தன்மையை மீண்டும் ஆராய்ந்து நோய்த் தொற்று குறைந்தால் வல்லுநர் குழுவின் ஆலோசனையைப் பெற்று நிலைமைக்கு ஏற்றாற்போல் தகுந்த முடிவு எடுக்க அரசு உறுதி பூண்டுள்ளது. ஆகவே, தகவல் தொழில்நுட்பத் துறை நிறுவனங்கள் நோய்த் தொற்றின் தன்மையைக் கருத்தில்கொண்டு முதல்வர் அறிவித்துள்ள மே 3-ம் தேதி வரையிலான ஊரடங்கினைக் கடைப்பிடிக்க வேண்டும்.
தகவல் தொழில்நுட்பத் துறை ஊழியர்கள் முன்புபோல் வீட்டிலிருந்தே பணியாற்றும் முறையினை மே 3 வரை கடைப்பிடிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். நோயின் அறிகுறி இல்லாமல் தற்போழுது 80 சதவீதம் பேருக்கு இந்தத் தொற்று ஏற்படுகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது. ஆகவே, மக்களின் பாதுகாப்பு மற்றும் உயிர்தான் தற்பொழுது பெரிதாக மதிக்கப்படுகிறது.
தகவல் தொழில்நுட்பத் துறையில் ஏற்பட்டுள்ள இந்தச் சரிவினை நாம் பின்பு மீட்டெடுத்து விட முடியும். ஆகவே தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் முதல்வர் அறிவித்த மே 3 வரையிலான ஊரடங்கினைத் தொடர்ந்து கடைப்பிடிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்".
இவ்வாறு அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தெரிவித்தார்.
இக்கூட்டத்தில் ஊரக வளர்ச்சி, உள்ளாட்சித் துறை கூடுதல் தலைமைச் செயலர் மற்றும் தகவல் தொழில் நுட்பவியல் துறை செயலாளர் (பொறுப்பு) ஹன்ஸ்ராஜ் வர்மா , வருவாய்த் துறை கூடுதல் தலைமை செயலாளர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் டாக்டர். ஜெ. ராதாகிருஷ்ணன், தமிழ்நாடு மின் ஆளுமை முகமை ஆணையர் சந்தோஷ் மு. மிஸ்ரா மற்றும் அரசு உயர் அலுவலர்கள் முன்னணித் தகவல் தொழில்நுட்ப நிறுவன உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்