தூத்துக்குடியில் ஊரடங்கால் முருங்கை கொள்முதல் பாதிப்பு: விவசாயிகள் வேதனை 

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள போலையர்புரம் முருங்கைக்காய் மண்டியில் விற்பனைக்காக வந்த முருங்கைக்காய்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகேயுள்ள போலையர்புரம் முருங்கைக்காய் மண்டியில் விற்பனைக்காக வந்த முருங்கைக்காய்.
Updated on
1 min read

தூத்துக்குடி மாவட்டத்தில் சாத்தான்குளம், தட்டார்மடம், சாயர்புரம் பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் முருங்கை பயிரிட்டுள்ளனா். இப்பகுதியில் விளையும் முருங்கைக்காய் நல்ல தரமுடன் இருப்பதால், வெளிமாவட்டங்களில் நல்ல வரவேற்பு உள்ளது.

சாத்தான்குளம், தட்டார்மடம், போலையர்புரம் பகுதிகளில் உள்ள மண்டிகள் மூலம் விவசாயிகளிடம் முருங்கை கொள்முதல் செய்யப்பட்டு திருநெல்வேலி, நாகர்கோவில், சென்னை உள்ளிட்ட இடங்களுக்கும், பெங்களூரு, டெல்லி உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் அனுப்பப்படுகிறது. பிரிட்டன், மலேசியா உள்ளிட்ட நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது நடைமுறையில் உள்ள ஊரடங்கு உத்தரவால், இப்பகுதியில் முருங்கை பயிரிட்டுள்ள விவசாயிகள் உரம் கிடைக்காமல் அவதிப்படுகின்றனர்.

சிலர் எங்கேனும் தேடி பிடித்து உரமிட்டு நல்ல முருங்கையை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். உரம் வைத்து பராமரிக்காத முருங்கைக்காய் தற்போது மண்டியில் 1 கிலோ ரூ. 5 முதல் 6 வரை கொள்முதல் செய்யப்படுகிறது. உரம் வைத்து பராமரிக்கப்பட்ட நல்ல தரமான முருங்கைக்காய் ரூ. 20 வரை கொள்முதல் செய்யப்படுகிறது.

தற்போது முருங்கைக்காய் மண்டிகள் மதியம் 1 மணி வரை மட்டுமே திறந்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், இங்கு முருங்கைக்காயை கொள்முதல் செய்து வெளிமாநிலம், வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியவில்லை.

திருநெல்வேலி, ஆலங்குளம், நாகர்கோவில் பகுதிகளுக்கு மட்டுமே கொண்டு செல்லப்படுகிறது. இதனால் குறைந்த அளவிலேயே முருங்கை கொள்முதல் செய்யப்படுகிறது.

இதுகுறித்து போலையர்புரத்தில் முருங்கைக்காய் மண்டி வைத்துள்ள ஆ.பாலமுருகன் கூறும்போது, இந்தப் பகுதியில் இருந்து வழக்கமாக தினமும் 60 டன் முருங்கை கொள்முதல் செய்யப்பட்டு வெளி மாவட்டங்கள், வெளிமாநிலம் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும்.

தற்போது, ஊரடங்கு உத்தரவால், நெல்லை, நாகர்கோவில் பகுதிகளுக்கு மட்டுமே எங்களது வாகனத்தில் முருங்கைக்காயை எடுத்துச் செல்கிறோம். தற்போது 1 மணி வரை மட்டுமே கடை திறந்திருக்கும் என்பதால் 5 முதல் 6 டன் வரையே முருங்கை கொள்முதல் செய்யப்படுகிறது என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in