கரோனாவால் உயிரிழந்தோர் உடல் அடக்கத்தைத் தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை

கரோனாவால் உயிரிழந்தோர் உடல் அடக்கத்தைத் தடுத்தால் குண்டர் சட்டத்தில் கைது: காவல் ஆணையர் எச்சரிக்கை
Updated on
1 min read

கரோனாவால் உயிரிழந்தவர் உடலை அடக்கம் செய்யக் கொண்டு செல்லும்போது தடுத்து, தாக்குதல் நடத்துபவர்கள் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என காவல் ஆணையர் எச்சரித்துள்ளார்.

சென்னையில் கரோனாவால் உயிரிழந்த பிரபல நியூரோ சர்ஜனின் உடலைப் புதைக்க பாதுகாப்புடன் மாநகராட்சி அதிகாரிகள் எடுத்துச் சென்றபோது அருகில் குடியிருப்பில் வசிக்கும் பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்து ஆம்புலன்ஸைத் தாக்கினர். உடன் வந்த ஊழியர்கள், ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களைத் தாக்கி அவர்களின் மண்டையை உடைத்தனர்.

பின்னர் ஆம்புலன்ஸ் திரும்பி வந்து போலீஸ் பாதுகாப்புடன் சென்று உடல் அடக்கம் செய்யப்பட்டது. இந்தச் சம்பவம் தொடர்பாக 21 பேரை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் 90 பேர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வருகின்றனர். இந்நிலையில் இன்று தண்டையார்பேட்டையில் சென்னை மாநகராட்சி நடத்திய ஆய்வுக்கூட்டத்தில் கலந்துகொண்ட காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் குண்டர் சட்டம் குறித்து எச்சரித்தார்.

கரோனா பாதிப்பால் இறந்தவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் தடுத்தாலோ, அல்லது அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்து தாக்குதல் நடத்தினாலோ குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல் ஆணையர் எச்சரித்தார்.

இதுகுறித்து அனைத்துக் காவல் நிலையங்களுக்கும் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதில். ''கரோனா நோய்த்தொற்று காரணமாக மருத்துவரோ, சாதாரண நோயாளிகளோ யார் உயிரிழந்தாலும் அவர்கள் உடலை அடக்கம் செய்யத் தகுந்த பாதுகாப்பை அளிக்க வேண்டும்.

அவ்வாறு செல்லும்போது உடல் அடக்கத்துக்கு யாராவது எதிர்ப்பு தெரிவித்து அரசு ஊழியரைப் பணி செய்ய விடாமல் தடுத்தாலோ, தாக்கினாலோ இடையூறு செய்தாலோ அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களைக் குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்” என உத்தரவிட்டுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in