நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்.. செல்போனில் மக்களிடம் பேசும் திமுக தலைவர் 

நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்.. செல்போனில் மக்களிடம் பேசும் திமுக தலைவர் 
Updated on
1 min read

தமிழகத்தில் ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ திமுகவினர் தயாராக உள்ளனர் என தெரிவிக்கும் வகையில் ‘நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன்’ என்று (பதிவு செய்யப்பட்ட குரல்) திமுக தலைவர் மு.க.ஸ்டாலினின் குரல் பொதுமக்களின் செல்போன்களில் ஒலிக்கத் தொடங்கியுள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வசிக்கும் மக்களின் தனிப்பட்ட செல்போனில் ஸ்டாலினின் குரலை ஒலிக்கச்செய்ய திமுகவினர் நடவடிக்கையில் இறங்கியுள்ளனர்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்தவும், இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறு உதவிகளையும் தமிழக அரசு செய்துவருகிறது.

இந்நிலையில் அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி அனைவரின் ஆலோசனைகளையும் பெற்று தமிழக மக்களை காக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என திமுக தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான மு.க.ஸ்டாலின் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தும் அரசு அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டவில்லை.

இந்நிலையில் திமுக கட்சி சார்பில் மக்களுக்கு பல்வேறு உதவிகளை வழங்க கட்சி நிர்வாகிகளுக்கு கட்டளையிட்டார். இதைத்தொடர்ந்து பல ஊர்களில் ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கட்சியினர் உதவிப்பொருட்கள், உணவுகள் வழங்கிவருகின்றனர்.

மேலும், திமுக சார்பில் வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்க ‘ஒன்றிணைவோம் வா’ என்ற அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் உதவி பெற அழைக்கவும் என 90730 90730 என்ற செல்போன் எண்ணும் வழங்கப்பட்டுள்ளது. தன்னார்வலராக பதிவு செய்ய www.ondrinaivomvaa.in என்ற இணையதள முகவரியும் தரப்பட்டுள்ளது.

இந்நிலையில் பொதுமக்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட செல்போனில் தொடர்புகொண்டு பதிவு செய்யப்பட்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் குரல் ஒலிக்கவும் செய்யப்பட்டுள்ளது.

செல்போனில் பேசும் ஸ்டாலின், நான் உங்கள் ஸ்டாலின் பேசுகிறேன். நான் எப்பொழுதும் மக்களின் நலனுக்கு முன்னுரிமை கொடுத்துள்ளேன். அது என்றும் மாறாது. கரோனா ஏற்படுத்தியுள்ள கடினமானசூழலில் நானும், திமுக கழக தொண்டர்களும் தமிழகம் முழுவதிலும் துயரத்தில் வாடும் மக்களுக்கு உதவ முன்வந்துள்ளோம்.

தங்களுக்கு ஏதேனும் கோரிக்கைகள் இருந்தாலோ அல்லது என்னை நேரடியாக தொடர்புகொள்ளவிரும்பினாலோ 90730 90730 என்ற எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

நீங்கள் உங்கள் இல்லங்களில் பாதுகாப்பாக இருக்கவேண்டுகிறேன். நோய்க்கு எதிரான போரில் நாம் எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கையும் எடுக்கவேண்டியது அவசியம். நானும் திமுக கழக தொண்டர்களும் தங்களுக்கு சேவை செய்ய எப்பொழுதும் தயாராக உள்ளோம், என பேசியுள்ளார்.

இந்த பதிவு செய்யப்பட்ட குரல், தமிழகத்தின் பல பகுதிகளில் வசிக்கும் அனைத்து மக்களின் தனிப்பட்ட அலைபேசி எண்களை சென்றடையும் நடவடிக்கையில் திமுகவினர் ஈடுபட்டுள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in