Last Updated : 21 Apr, 2020 01:21 PM

 

Published : 21 Apr 2020 01:21 PM
Last Updated : 21 Apr 2020 01:21 PM

மீண்டு வரும் நேரத்தில் கரோனா வடிவில் சோதனை: தத்தளிக்கும் முந்திரி, பலா விவசாயிகள்

பண்ருட்டி என்றாலே அனைவருக்கும் நினைவுக்கு வருவது முக்கனிகளில் ஒன்றான பலாவும், உயர்ரக முந்திரியும்தான். அந்த முந்திரித் தொழிலையும், பலா விவசாயத்தையும் சார்ந்துள்ள விவசாயிகள் தற்போது மிகுந்த சோகத்திற்கு ஆளாகியுள்ளனர்.

கரோனா வைரஸ் தொற்று பரவுதலைத் தடுக்கும் விதமாக ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதால், 21 நாட்களுக்குப் பின் ஊரடங்கு நீங்கும், அதன் மூலம் தொழிலைத் தொடங்கலாம் என காத்திருந்த முந்திரி விவசாயிகள், சொல்ல முடியாத துயரத்துக்கு ஆளாகியுள்ளனர்.

கடந்த 2011-ம் ஆண்டு இறுதியில் வீசிய தானே புயலால் முந்திரியும், பலா மரங்களும் வேரோடு சாய்ந்தன. இதனால் அதைச் சார்ந்திருந்த 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியானது. இதையடுத்து, அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு நிவாரண உதவிகளை வழங்கியதையடுத்து, அவர்களது வாழ்வாதாரம் மீண்டும் துளிர்விடத் தொடங்கியது.

இந்த நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், பலா மரங்களில், பழத்தை அறுவடை செய்ய முடியாமல், மரத்திலேயே விட்டுவிடுகின்றனர். இதனால் பழங்கள் அழுகும் நிலை ஏற்பட்டுள்ளது. பண்ருட்டி பலாப் பழங்களுக்கு என தனி மவுசு உண்டு. வெளிமாநிலங்களுக்குக் கொண்டு செல்ல முடியவில்லை, சில்லறை விற்பனை நிலையங்களும் இல்லை என்பதால் பெரு நஷ்டத்தைச் சந்தித்து வருவதாக பலா விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர்.

அதேபோன்று தற்போது முந்திரியை அறுவடை செய்யும் காலம். முந்திரியை அறுவடை செய்து, அவற்றை மூட்டைகளாகக் கட்டி வைக்க வாய்ப்புண்டு. ஆனால், முந்திரி மகசூலுக்கு கடன் வாங்கிய கடன் தொகையைச் செலுத்த முடியாது. இறக்குமதி செய்து முந்திரியை மதிப்பு கூட்டும் தொழிலை சிறுதொழிலாக செய்து வந்த சுமார் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், தொழில் செய்ய முடியாமலும், நுண்கடன் தொகையை அடைக்க முடியாமலும் அவதிப்படுகின்றனர்.

அதேபோன்று முந்திரி பெரு வியபாரிகள், மதிப்புக் கூட்டப்பட்ட முந்திரிகளை எந்த நாட்டுக்கும் ஏற்றுமதி செய்ய முடியாததால், கடன் தொகையை திரும்பச் செலுத்திவதில் பிரச்சினை நிலவுவதாகத் தெரிவிக்கின்றனர்.

முத்தாண்டிக் குப்பத்தைச் சேர்ந்த சிறுதொழில் முனைவோரான லதா என்ற பெண் கூறுகையில், "மகளிர் சுய உதவிக் குழு மூலமாக வங்கியில் கடன் பெற்று முந்திரி மதிப்புக் கூட்டும் தொழில் செய்துவருகிறோம். தொழில் முடங்கிவிட்டது. வருமானம் இல்லை.

வங்கியில் வாங்கிய கடனை 3 மாதம் செலுத்தத் தேவையில்லை என்று கூறுகின்றனர். ஆனால், வங்கியிலோ, 3 மாதக் கடன் தொகையை செலுத்தத் தவறினால் கூடுதல் வட்டியோடுதான் செலுத்த வேண்டும் என்கின்றனர். இது ஒருபுறம் அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தினசரி வருமானம் நின்று போனதால், ஊரடங்கை நீட்டிக்க நீட்டிக்க உணவுக்குப் பஞ்சம் ஏற்படும் சூழல் நிலவுகிறது. வீட்டில் பிள்ளைகளுக்கு சிற்றுண்டி வாங்கிக் கொடுக்க கூட கையில் பணமில்லை. 2011-ம் ஆண்டு தானே புயல் வீசி எங்கள் வாழ்வாதாரம் நிலை குலைந்து போனது. அதிலிருந்து மீண்டு வரவே 7 வருடங்கள் ஆன நிலையில், தற்போது கரோனா வடிவில் மீண்டும் சோதனை ஏற்பட்டுள்ளது.

இந்த முந்திரி, பலா தொழிலை நம்பி இப்பகுதியில் சுமார் ஒன்றரை லட்சம் வாழ்ந்து வருகிறோம். எங்களது நிலை என்னாவது?" என்று கண்ணீர் வடிக்கிறார்.

அரசு கடன் தொகையைத் திரும்பச் செலுத்த கால அவகாசம் வழங்கியிருக்கிறது. ஆனால், வங்கிகள் கூடுதல் வட்டி வசூலிக்கும் நிலை உள்ளது. எனவே, அரசு 3 மாத தவணைத் தொகைக்கு வட்டியைத் தள்ளுபடி செய்ய வேண்டும். நீண்ட காலப் பயிர்களான முந்திரி பலா விவசாயிகளுக்கு நிவாரண உதவியாக மாதத்திற்கு ரூ.25 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது அவர்களது பிரதான கோரிக்கையாக உள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x