''அவங்க சேவைக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு சேவையே இல்ல!''- ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வீ நெகிழ்ச்சி

''அவங்க சேவைக்கு முன்னாடி இதெல்லாம் ஒரு சேவையே இல்ல!''- ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வீ நெகிழ்ச்சி
Updated on
1 min read

கைகளுக்குச் சொந்தக்காரர்கள் யார் என்ன எனும் விவரங்களெல்லாம் தெரியமால் செய்வதுதான் உதவி. கரோனா ஊரடங்கு வீடடங்கு காலகட்டமான இந்த தருணங்களில், இப்படித்தான் தெரியாதவர்களும் அறியாதவர்களும் உதவி செய்துகொண்டே இருக்கிறார்கள். யாரோ யாருக்கோ செய்யும் அந்த உதவிதான்... உண்மையான நேயத்தின் வெளிப்பாடு. உறுதியான உதவியின் உதாரணம்.

‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வீ கடந்த சில நாட்களாகவே இப்படித்தான் யாருக்கெல்லாம் உதவி தேவையாக இருக்கும் எனப் பார்த்துப் பார்த்து செய்து வருகிறார்.

''ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சுகாதாரப் பணியிலும் லேப் டெக்னீஷியன் பிரிவிலும் 200க்கும் மேற்பட்டவர்கள் பணிபுரிந்து வருகிறார்கள். கூடவே செக்யூரிட்டிப் பணியில் இருப்பவர்களையும் சேர்த்து அவர்களுக்கு மொத்தம் 2,000 கிலோ அரிசியை வழங்கினேன். 10,000 ரூபாய்க்கும் கீழே சம்பளம் வாங்குபவர்கள், இந்தக் காலகட்டத்தில் மிகவும் சிரமப்படுவார்கள் என்பதை உணர்ந்ததால் செய்கிறேன்'' என்கிறார் ஷெல்வீ.

‘அங்காடிதெரு’ சிந்து எனும் நடிகை, அவ்வப்போது பல சேவைகளைச் செய்து வருபவர். நலிவுற்ற கலைஞர்களுக்காக அவர் பொருட்களை வழங்க முடிவு செய்த போது, ஜோதிடர் ஷெல்வீ, அவரிடம் 200 கிலோ அரிசியை வழங்கி உதவியுள்ளார். மேலும் நலிவுற்ற பத்திரிகையாளர்களுக்காக, சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் 500 கிலோ அரிசியும் சேத்துப்பட்டு குடிசைப் பகுதியில் உள்ள மக்களுக்காக, அங்கே உள்ள ஜீவா என்பவர் மூலமாக 300 கிலோ அரிசியும் வழங்கியுள்ளார்.

சென்னை உயர் நீதிமன்ற வழக்கறிஞர் சந்திரமோகனையும் சேர்த்துக்கொண்டு, வடலூரில் உள்ள வள்ளலார் ஆஸ்ரமத்துக்கு, அங்கே நடைபெறும் அன்னதானத்திற்கு 300 கிலோ அரிசியை வழங்கியுள்ளார்.

‘’அண்ணாநகர் மேற்குப் பகுதி, முகப்பேர் உள்ளிட்ட பகுதிகளில் ஆட்டோ ஸ்டேண்டுகளில் உள்ள ஆட்டோ ஓட்டுநர்கள் 125 பேருக்கு 1,500 மதிப்புள்ள அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க இருக்கிறேன். அதேபோல், சுகாதாரப் பணியாளர்களுக்கும் தொடர்ந்து அரிசி உள்ளிட்ட பொருட்களை வழங்க முடிவு செய்திருக்கிறேன். இந்த கரோனா ஊரடங்கு வீடடங்கு காலத்தில், அயராது உழைத்துக் கொண்டிருக்கும் தன்னலமற்ற இவர்களின் சேவைக்கு முன்னால், நான் செய்வதெல்லாம் ஒன்றுமே இல்லை. இப்படிச் செய்வதில் சின்னதாக ஒரு ஆத்ம திருப்தி அவ்வளவுதான்!’’ என்று நெக்குருகிச் சொல்கிறார் ‘யதார்த்த ஜோதிடர்’ ஷெல்வீ.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in