

அரியலூர் மாவட்டத்தில் மருந்தகத்தில் வேலை செய்த பெண்கள் இருவருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
டெல்லி மாநாட்டுக்கு அரியலூர் மாவட்டம் செந்துறையைச் சேர்ந்த 3 பேர், அரியலூர் மற்றும் திருமானூரைச் சேர்ந்த தலா ஒருவர் என 5 பேர் சென்றுவந்தனர். இதனையடுத்து மேற்கண்ட 5 பேரையும் மருத்துவக் குழுவினர் கடந்த மாதம் அழைத்துச் சென்று ரத்தப் பரிசோதனை செய்தனர்.
அதில், செந்துறை பகுதியில் ரைஸ் மில் நடத்தி வரும் ஒருவருக்கு மட்டும் கரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து, அவர் திருச்சி அரசு மருத்துவமனையில் தனி வார்டில் அனுமதிக்கப்பட்டு கடந்த வாரம் பூரண குணமடைந்து வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
டெல்லி சென்று வந்த மற்ற 4 பேரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டு தனிமைப்படுத்திக் கண்காணிக்கப்பட்டு வந்தனர். அதேவேளையில், வீட்டுக்கு அனுப்பப்பட்டவர்களின் உறவினர்கள், அவர்களது கடைகளில் வேலை செய்பவர்கள் என 28 பேரின் ரத்த மாதிரிகள் கடந்த வாரம் சேகரிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
அதில், டெல்லி மாநாட்டுக்குச் சென்று வந்த செந்துறையில் வைத்துள்ள மருந்தகத்தில் வேலை பார்க்கும் 52 மற்றும் 24 வயதுடைய இரண்டு பெண்களுக்கு கரோனோ தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனையடுத்து இருவரையும் இரவோடு இரவாக ஆம்புலன்ஸ் மூலம் திருச்சி அரசு மருத்துவமனைக்கு மருத்துவக்குழுவினர் அனுப்பி வைத்தனர்.
மேலும், மேற்கண்ட இரண்டு பெண்களின் வீடுகளில் உள்ளவர்களுக்கு கரோனா தொற்று உள்ளதா எனக் கண்டறிய அவர்களின் ரத்த மாதிரிகளும் இரவோடு இரவாக சேகரிக்கப்பட்டு திருச்சிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
ரத்த சோதனையில் கரோனா தொற்று இல்லை எனக் கூறப்பட்ட நபரின் மருந்துக் கடையில் வேலை பார்த்த இருவருக்கு கரோனா தொற்று இருப்பது செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து செந்துறை பகுதியில் கட்டுப்பாட்டை அதிகரித்து பாதுகாப்பை மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்டக் காவல்துறை பலப்படுத்தியுள்ளது.
ஏற்கெனவே, செந்துறையைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா தொற்று உறுதியானதையடுத்து செந்துறை பகுதி ரெட் அலர்ட்டாக அறிவிக்கப்பட்டு மக்கள் நடமாட்டம் முற்றிலும் தடுக்கப்பட்டது. இந்நிலையில், பாதிக்கப்பட்ட நபர் கடந்த சில தினங்களுக்கு முன்பு பூரண குணமடைந்து வீடு திரும்பியதால், கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் என மக்கள் நினைத்திருந்த வேளையில், தற்போது இருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானதால் மக்கள் மீண்டும் வீட்டினுள் முடங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.