Published : 21 Apr 2020 12:02 PM
Last Updated : 21 Apr 2020 12:02 PM

100 அடியைத் தாண்டிய மேட்டூர் அணையின் நீர்மட்டம்; ஜூன் 12-ம் தேதி காவிரி பாசனத்துக்கு அணையைத் திறக்க வேண்டும்: முத்தரசன் கோரிக்கை

மேட்டூர் அணையில் நீர்மட்டம் 100 அடியைத் தாண்டி இருப்பதால் ஜூன் 12-ம் தேதி காவிரி பாசனத்திற்கு தண்ணீர் திறந்துவிட வேண்டும் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து முத்தரசன் இன்று வெளியிட்ட அறிக்கை:

“மேட்டூர் அணையில் நீர் மட்டம் 100 அடியைத் தாண்டியுள்ளது. இந்தச் சாதகமான நிலையைக் கருத்தில் கொண்டு, தமிழ்நாடு அரசு ஜூன் 12 ஆம் தேதி காவிரிப் பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்படும் என்ற அறிவிப்பு வெளியிட வேண்டும்.

விவசாயி மகன் முதல்வர் என்பதால் விவசாயத்தின் அவசியம் கருதி காவிரி பாசனப் பகுதியினை “பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண்மை மண்டலம்” என்று அறிவித்ததாக முதல்வர் பெருமை கொள்கிறார். ஆனால் “தலை மீது தொங்கும் கத்தியாக” இப்பகுதியில் ‘ஹைட்ரோ கார்பன் எரிவாயு’ மற்றும் எண்ணெய் எடுப்பது தொடர்பாக வேதாந்தா, ஓஎன்ஜிசி போன்ற நிறுவனங்கள் ஆய்வுக் கிணறுகள் தோண்ட மத்திய அரசு வழங்கியுள்ள உரிமங்களை ரத்து செய்ய மறுத்து வருகிறார்.

சாகுபடிக்கு விதை நெல், உரம் போன்றவற்றைத் தேடி, நாற்றங்கால் விட்டு விவசாயிகள் சாகுபடிக்குத் தயாராவார்கள். இத்துடன் கடைமடை வரை தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் கிடைக்கச் செய்ய வேண்டும் என்று விவசாயிகள் நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றனர்.

காவிரி பாசனக் கால்வாய்கள், வடிகால்கள் தூர் வாரும் பணிகள் ஆண்டுதோறும் தண்ணீர் திறப்பு அறிவிக்கப்பட்ட பின்னர்தான் ‘ஒப்பந்தம்’ விடப்படுகின்றன. இது நடைமுறையில் ஒட்டுமொத்த விரயமாகி, இடைத்தரகர்கள் ஆதாயம் அடைவதாக மட்டுமே முடிந்து போகிறது.

இந்த மோசடிகளைத் தடுக்க முன்கூட்டியே தூர் வாரும் பணிகள் மேற்கொள்ள போதுமான கால அவகாசத்தில் ‘ஒப்பந்தப் புள்ளிகள்’ கோரப்பட்டு, வெளிப்படையாக ஏலம் விட வேண்டும். தண்ணீர் திறப்புக்கு முன்னர் குறைந்தபட்சம் 15 நாட்களுக்கு முன்னதாக தூர் வாரும் பணிகள் முடிப்பதை உறுதி செய்ய வேண்டும் .

தமிழ்நாட்டின் நெற்களஞ்சியமாம் காவிரிப் பாசனத்திற்கு ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்க வேண்டும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது”.

இவ்வாறு முத்தரசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x