

தென்காசி மாவட்டத்தில் ரேபிட் கிட் மூலம் கரோனா பரிசோதனை பணி தொடங்கியது.
தென்காசி மாவட்டம் புளியங்குடியில் கரோனா தொற்று பாதிப்பு கடந்த சில நாட்களாக அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்யும் பணி புளியங்குடியில் நேற்று தொடங்கியது. இந்தப் பணியில், 8 மருத்துவர்கள், 15 சுகாதார ஆய்வாளர்கள் ஈடுபட்டனர்.
இதுகுறித்து சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறும்போது, “பிசிஆர் பரிசோதனை மூலம் கரோனா தொற்றை ஆரம்ப நிலையிலேயே கண்டுபிடித்துவிடலாம்.
இந்த கருவி மூலம் தென்காசி மாவட்டத்தில் கடந்த 19-ம் தேதி வரை 768 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது.
இரவில் அனுப்பப்படும் மாதிரிகள் பரிசோதனை முடிந்து மறுநாள் காலையில் முடிவு வந்துவிடுகிறது.
அதன் மூலம், கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால் சம்பந்தப்பட்ட நோயாளியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தென்காசி மாவட்டத்துக்கு 300 ரேபிட் டெஸ்ட் கிட்கள் வந்துள்ளன. இவற்றைக் கொண்டு பரிசோதனை செய்யும் பணி தொடங்கியுள்ளது. ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி பரிசோதனை விரைவில் முடிவு வந்துவிடும்.
ஆனால், ஆரம்பநிலையில் உள்ள கரோனா தொற்றை இதன் மூலம் கண்டுபிடிக்க முடியாது. எனவே, ஏற்கெனவே தொற்று கண்டறியப்பட்ட நபர்களின் குடும்பத்தினர், தொடர்பில் இருந்தவர்கள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்களுக்கு மட்டும் ரேபிட் கிட் மூலம் பரிசோதனை செய்யப்படுகிறது.
இதில், நோய்த்தொற்று இருக்கும் நபர்களை கண்டறிந்து, அவர்களுக்கு ரத்தம், சளி மாதிரி எடுத்து பிசிஆர் பரிசோதனை செய்யப்படும்” என்றனர்.