

கரோனா பாதுகாப்புப் பணியை, பறக்கும் கேமரா மூலம் கண்காணிக்கும் முறையை புதுச்சேரி போலீஸார் இன்று முதல் தொடங்கியுள்ளனர்.
புதுச்சேரியிலுள்ள நான்கு பிராந்தியங்களில் புதுச்சேரி, மாஹேயில் மட்டும் கரோனா தொற்றால் 7 பேர் பாதிக்கப்பட்டனர். ஏற்கெனவே 4 பேர் குணமடைந்து மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினர். தற்போது 3 பேர் மட்டும் சிகிச்சையில் உள்ளனர்.
புதுச்சேரியில் கரோனா தொற்றைத் தடுக்க தனிமனித இடைவெளியுடன் பொதுமக்கள் தங்களது அன்றாட வாழ்க்கையைத் தொடர வேண்டும் என போலீஸார் அறிவுறுத்தி வருகின்றனர். மதியம் ஒரு மணிக்குப் பிறகு மக்கள் நடமாட்டம் தடுக்கப்பட்டுள்ளது. காலை நேரங்களில் மக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் விதமாக அனைத்துக் காவல் நிலையங்களின் சார்பாகவும் பறக்கும் கேமராக்கள் தற்போது பயன்படுத்தப்படுகின்றன.
புதுச்சேரி லாஸ்பேட்டை போலீஸார் அவ்வாறு கண்காணித்து அதை வீடியோவாகப் பதிவிட்டுள்ளனர். அதில் கிழக்குக் கடற்கரை சாலையில் உள்ள சிவாஜி சிலை, காமராஜர் மணிமண்டபம், சித்தானந்தா கோயில் நான்கு முனை சந்திப்பு ஆகியவற்றில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளதை பதிவிட்டுள்ளனர்.
இதேபோல், உழவர் சந்தை பகுதியில் மக்கள் சமூக இடைவெளியுடன் சென்று காய்கறி வாங்குவதைப் படம் பிடித்துள்ளனர். லாஸ்பேட்டை போலீஸ் சரகத்தைப் பொறுத்தவரையில் பொதுமக்கள் தனிமனித இடைவெளியுடன் செயல்படுவதை இந்தப் பதிவில் போலீஸார் சுட்டிக் காட்டியிருக்கிறார்கள்.
எல்லைப் பகுதியிலும் பறக்கும் கேமரா மூலம் ஆய்வு
இந்நிலையில், புதுச்சேரி எல்லைப் பகுதியான திருபுவனை, திருவாண்டார் கோயில் பகுதிகளில் 2 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனால் இந்த இரண்டு பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்டு, ஆங்காங்கே தடுப்புகள் வைக்கப்பட்டு பொதுமக்கள் வெளியே வரவும், வெளியாட்கள் உள்ளே செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பொதுமக்கள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் வகையில் போலீஸார் அந்தப் பகுதி முழுவதும் 'ஹெலிகேம்' மூலம் ஆய்வு செய்து வருகின்றனர். மேலும், இந்தப் பகுதியில் இருந்து பொதுமக்கள் தேவையில்லாமல் நடமாடக் கூடாது என்று ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதனால் பகுதி முழுவதும் பொதுமக்கள் நடமாட்டம் இல்லாமல் வெறிச்சோடிக் காணப்படுகின்றது.