

சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தின் நடைமேம்பாலத்தை ரூ.1.5 கோடி செலவில் அகலப்படுத்தும் பணி விரைவில் தொடங்கப்படவுள்ளது.
எழும்பூர் ரயில் நிலையம் தமிழகத்தின் முக்கிய ரயில் நிலையங்களில் ஒன்றாக இருப்பதால், தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இங்கு வந்து செல்கின்றனர். இங்கு மொத்தம் 11 நடைமேடைகள் உள்ளன. இவற்றில் 10 மற்றும் 11-வது நடைமேடைகளில் புறநகர் மின்சார ரயில்களும் இயக்கப்படுவதால் காலை மற்றும் மாலை நேரங்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது. எனவே மக்கள் மெதுவாக நகர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘‘எழும்பூர் ரயில் நிலையத்தில் பயணிகளின் வசதிக்காக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறோம். குறிப்பாக ரயில் நிலையம் முன்பு வாகனங்கள் நிறுத்தும் இடங்களில் அக்கிரமிப்புகளை அகற்றியுள்ளோம்.
மேலும், ரயில் நிலைய நுழைவு வாயில் அருகில் உள்ள நடைமேம்பாலம் தற்போது உள்ள 12 அடி அகலத்தில் இருந்து 22 அடிகளாக விரிவுபடுத்தப்படவுள்ளது. ரூ.1.5 கோடி செலவில் இந்த பணிகளை மேற்கொள்ள கடந்த மாதம் 2-வது வாரத்தில் டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. இந்த மாதம் இறுதிக்குள் பணிகள் தொடங்கி அடுத்த சில மாதங்களுக்குள் முடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றனர்.