

மூணாறு அடுத்துள்ள சூரியநெல்லி பகுதியைச் சேர்ந்தவர் விஜி. இவரது மகன் விஜயபிரகாஷ் (24). கட்டிடத் தொழிலாளி. மது, கஞ்சாவுக்கு அடிமையானவர்.
தற்போது மூணாறு உட்பட பல பகுதிகளில் ஊரடங்கு அமலில் உள்ளது. இருப்பினும் விஜயபிரகாஷ் சூரியநல்லி, சின்னக்கானல் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்துள்ளார். போலீஸார் இவரை பலமுறை எச்சரித்துள்ளனர். இருந்தபோதிலும் மீண்டும் மோட்டார் சைக்கிளில் சுற்றியுள்ளார். இதைத் தொடர்ந்து சாந்தன்பாறை போலீஸார் இவரது மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.
இதனால் மனமுடைந்த விஜயபிரகாஷ் தானும் தீக்குளித்து, காவல் நிலையத்தை எரித்து விடுவதாகக் கூறிச் சென்றுள்ளார். இந்நிலையில் கையில் கொண்டு வந்திருந்த டீசலை தன் மீது ஊற்றி தீ வைத்துக் கொண்டார். மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.