ராமநாதபுரத்தில் முதன்முறையாக கல்லூரி மாணவருக்கு கரோனா: வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதவர்

ராமநாதபுரத்தில் முதன்முறையாக கல்லூரி மாணவருக்கு கரோனா: வெளிநாடு, வெளிமாநிலம் செல்லாதவர்
Updated on
1 min read

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

ராமநாதபுரம் மாவட்டம் ஆர்.எஸ்.மங்கலத்தைச் சேர்ந்த 19 வயதுடைய கல்லூரி மாணவருக்கு இன்று (ஏப்ரல் 20) கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இம்மாணவர் சிவகங்கை மாவட்டம் இளையான்குடியில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருகிறார். இவருக்கு சளி, இருமல், மூச்சுத்திணறல் ஏற்பட்டதால், ஆர்.எஸ்.மங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

அதனையடுத்து இன்று இவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன்பின் மாணவர் இன்று சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.

ராமநாதபுரம் மாவட்டத்தில் முதன் முறையாக கல்லூரி மாணவருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, சுகாதாரத்துறையினர் மாணவரிடம் தொடர்பில் இருந்தவர்கள், குடும்பத்தினர் குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.

மேலும் ஆர்.எஸ்.மங்கலம் பகுதியை சீல் வைத்து, மருத்துவ கண்காணிப்பில் கொண்டு வந்துள்ளனர். இம்மாணவரே, இவரது உறவினர்களோ யாரும் டெல்லி தப்லீக் மாநாட்டிற்குச் சென்று வரவில்லை. இருந்தபோதும் இவருக்கு கரோனா தொற்று எப்படி ஏற்பட்டது என சுகாதாரத்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

மாவட்டத்தில் இதுவரை 841 பேர் கரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இதுவரை 11 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 2 பேர் குணமடைந்து வீட்டிற்கு திரும்பியுள்ளனர். மீதி 9 பேர் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in