Published : 20 Apr 2020 09:22 PM
Last Updated : 20 Apr 2020 09:22 PM

உணவு, நிவாரணப் பொருட்கள்: தன்னார்வலர்களுக்கு சென்னை மாநகராட்சி கடும் நிபந்தனை 

சென்னை உயர்நீதிமன்ற உத்தரவை மேற்கோள் காட்டிய பகுதிகள் உள்ளிட்ட இடங்களில் தன்னார்வலர்கள் நிவாரண பொருட்கள் விநியோகிக்க தடை விதித்தும் நிவாரணப் பொருட்களை விநியோகிக்க நிபந்தனைகளை விதித்தும் சென்னை மாநகராட்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.

இதுகுறித்து சென்னை மாநகராட்சி விடுத்துள்ள செய்திக்குறிப்பு:

“பெருநகர சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் பல்வேறு அமைப்புகள் தொண்டு நிறுவனங்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஊரடங்கு உத்தரவால் வேலை வாய்ப்பின்றி உள்ள தொழிலார்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வருகின்றனர். அவ்வாறு உதவிகள் வழங்கும் போது கரோனா வைரஸ் நோய் தொற்று பரவாமல் தடுக்கும் வகையில் முகமூடி, கையுறை மற்றும் சமூக இடைவெளியுடன் வழங்குவது அவசியமாகிறது.

எனவே உணவு பொருட்களை வழங்க சென்னை உயர் நீதிமன்றம் பல்வேறு வழிக்காட்டுதல்களை வழங்கி தீர்ப்பு அளித்துள்ளது. அதன்படி தனியார் அமைப்பு, அரசு சாரா அமைப்புகள் அல்லது குழுவினர் ஏழை எளியவர்களுக்கு உணவு மற்றும் பொருட்கள் வினியோகம் செய்யும்போது பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் ஏற்கெனவே பத்திரிகை செய்தி வாயிலாக வெளியிடப்பட்டுள்ளது.

தற்பொழுது சென்னை உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலின்படி பெருநகர சென்னை மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள் அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற பகுதிகளுக்கு அருகிலுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

அதன்படி கீழ்க்கண்ட நடைமுறைகளை தன்னார்வலர்கள் அனைவரும் பின்பற்ற வேண்டும்.

* தொற்று நோய் கண்டறியப்பட்டு பெருநகர சென்னை மாநகராட்சியால் தடை செய்யப்பட்ட பகுதிகள் (Containment Zone) ஆபத்தான பகுதிகள் (Hot spot) ஆதலால் அப்பகுதியினை சுற்றி 2 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

* அரசு பொது மருத்துவமனைகள், மாநகராட்சி சுகாதார மையங்கள், கரோனா தொற்று நோய் பரிசோதனை மையங்கள் மற்றும் தொற்று நோய் சிகிச்சை வழங்க அரசால் அனுமதிக்கப்பட்ட தனியார் மருத்துவமனைகள் போன்ற இடங்கள் ஆபத்தான பகுதிகள் (Hot spot) ஆதலால் மேற்கண்ட மருத்துவமனைகள் அருகிலுள்ள 2 கி.மீ. சுற்றளவுக்குட்பட்ட இடங்களில் உணவு வழங்குவது முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது.

* மேற்கண்ட தடை செய்யப்பட்ட பகுதிகளில் உணவு வழங்க வேண்டுமென்றால் பெருநகர சென்னை மாநகராட்சியின் தேர்ந்தெடுக்கப்பட்ட கிடங்குகளில் உணவு பொருட்களை அளிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. அவ்விதம் பெறப்படும் உணவுப் பொருட்கள் முறையான உணவு பரிசோதனை மேற்கண்ட பின் மாநகராட்சி மூலம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்படும்.

* உணவு மற்றும் நிவாரண உதவிப் பொருட்கள் வழங்குவதற்கு 48 மணி நேரத்திற்கு முன்பு பெருநகர சென்னை மாநகராட்சியின் சம்பந்தப்பட்ட மண்டல அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.

* உணவு வழங்கும் இடம் மற்றும் இதர விவரங்களை மண்டல அலுவலரிடம் தெரிவிக்க வேண்டும்.

* மண்டல அலுவலர், உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு வழங்கும் இடத்தினை ஆய்வு செய்து அவ்விடம் உணவு வழங்க உகந்த இடம் என கண்டறியப்பட்ட பின்னர் தான் உணவு வழங்க வேண்டும்.

* எந்த மண்டலத்திற்குட்பட்ட இடத்தில் உணவு வழங்க இருக்கிறார்களோ அந்த மண்டல எல்லைக்குட்பட்ட இடத்திலேயே உணவு தயாரிக்கப்பட வேண்டும்.

* தயாரிக்கப்பட்ட உணவை குறிப்பிட்ட நேரத்திற்குள் அமைப்பாளர்கள் வழங்கி முடிக்க வேண்டும்.

* உணவு வழங்குமிடத்தில் ஓட்டுநர் தவிர, தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதி/ தன்னார்வ அமைப்பு/அரசு சாரா அமைப்புகள்/குழுவினர் உட்பட மூன்று நபர்கள் மட்டுமே இருக்க வேண்டும்.

* உணவுப் பொருட்கள் ஏற்றிச் செல்லும் வாகனத்தில் மூன்று நபர்களுக்கு மேல் பயணிக்கக் கூடாது.

* உணவு வழங்கும் போது, சமூக இடைவெளியினை கட்டாயமாக பின்பற்ற வேண்டும்.

* மேற்கண்ட நிபந்தனைகளுடன் அரசு அறிவித்துள்ள 144 தடை உத்தரவின்போது கடைபிடிக்க வேண்டிய நடைமுறைகளை கண்டிப்பாக பின்பற்றி உணவு வழங்கப்பட வேண்டும்.

* இவை தவிர, அரசு மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சியால் உணவு வழங்குதல் குறித்து அவ்வப்போது விதிக்கப்படும் நிபந்தனைகளையும் உணவு வழங்கவுள்ள அமைப்பாளர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

கரோனா வைரஸ் நோய்த்தொற்று தடுக்கும் பொருட்டு பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் நலன் கருதி சென்னை உயர்நீதிமன்ற வழிக்காட்டுதலில்படி மேற்கொள்ளப்பட்டுள்ள மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என ஆணையர் பிரகாஷ், தெரிவித்துள்ளார்”.

இவ்வாறு சென்னை மாநகராட்சி செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x