

மதுவிலக்கை அமல்படுத்த இது சரியான நேரம். அரசுக்கு வருவாய் வர வைக்க பல வழிகள் உண்டு. மதுபான விற்பனை மூலம் வருமானம் வருவதை எதிர்பார்க்காமல் இயற்கை தந்த இந்த வாய்ப்பைப் பயன்படுத்துங்கள் என தமிழக அரசுக்கு காந்திய மக்கள் இயக்க இளைஞர் அமைப்பு வேண்டுகோள் வைத்துள்ளது.
இதுகுறித்து காந்திய மக்கள் இயக்க இளைஞரணி தலைவர் சதீஷ் குமார் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
“மதுவிலக்கு தளர்த்தப்பட்ட காலம் முதல் இன்று வரை இப்படியொரு சந்தர்ப்பம் அமைந்ததில்லை. குறிப்பிட்ட சில நாட்கள் அரசாங்க விடுமுறையாக கடைகள் அடைக்கப்படும். அதுவும் முன்கூட்டியே தெரிவிப்பதால் அந்த சில நாட்களுக்கு தேவையானதை வாங்கிச் சென்றவர்களும் உண்டு.
ஆனால் கடந்த ஒரு மாதம் என்பது எதிர்பாராத ஒன்று. மக்கள் வீடுகளில் குடும்படத்துடன் இருக்கும் சூழலில் மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் அவர்கள் மேம்பட்டு குடிப்பழக்கத்தில் இருந்து வெளிவந்திருக்கிறார்கள். எனவே மனிதர்களை சுற்றியிருக்கும் சூழல், தன்மை அவர்களை நெறிப்படுத்தும் என்பதில் ஐயத்திற்கு இடமில்லை. மக்களை நெறிப்படுத்துவதுதான் அரசாங்கத்தின் முதல் கடமை. இயற்கை அந்த வாய்ப்பை வழங்கி இருக்கிறது.
மதுப்பழக்கம் உள்ளவர்களில் நிச்சயம் 80 - 90 சதவீதம் பேர் இந்த ஒரு மாத காலம் குடியை மறந்து குடும்பத்துடன் நேரத்தைச் செலவிட்டு வருகிறார்கள். எனவே எளிதில் கிடைக்கக்கூடிய (accessibility) வகையில் மது இல்லாமல் இருந்தாலே இந்த 80 - 90 சதவீதம் பேர் மது இல்லாமல் வாழ முடியும். அதற்கு இந்த ஒரு மாத ஊரடங்கே சாட்சி. மீண்டும் மதுக்கடைகள் திறந்தால் இவர்களில் பெரும்பாலானோர் மறுபடியும் மதுப்பழக்கத்திற்கு திரும்பும் தவறு நடக்க வாய்ப்புள்ளது.
மீதமுள்ள 10 சதவீதம் பேர் ஏதோ ஒருவகையில் கள்ளத்தனமாக வாங்கி அருந்தி வருகிறார்கள் அல்லது போதைக்கு வேறு வழிகளைக் கையாண்டு விபரீதத்துக்கு உள்ளாகி வருகிறார்கள் . அது சம்பந்தப்பட்ட செய்திகள் சில வந்து கொண்டுதான் இருக்கின்றன. அவர்களையும் அரசு சரியான முறையில் மறுவாழ்வு மையங்கள் மூலம் உளவியல் ரீதியாகக் கையாண்டால் படிப்படியாக மீட்டுவிடமுடியும்.
அரசாங்கம் நடத்த வருவாய் வேண்டும் என்றால் வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துங்கள் அல்லது ஆற்று மணல், தாது மணல் , கிரானைட் கற்கள் ஆகியவற்றை முற்றாக விநியோகிக்கும் பொறுப்பை அரசு ஏற்க வேண்டும். பத்திரப் பதிவுத்துறையில் சந்தை விலைக்கும் வழிகாட்டு விலைக்கும் இடையில் இருக்கும் இடைவெளியைச் சீரமைக்க வேண்டும். விற்பனை வரியை ஒழுங்காகத் திட்டமிட்டு முழுவதுமாக வசூலிப்பதில் அரசு அர்ப்பணிப்புடன் செயல்பட வேண்டும்.
ஆற்று மணல், தாது மணல் கிரானைட் கற்கள் விற்பனையை அரசே ஏற்று நடத்துவதன் மூலமும், முத்திரை வரியைப் பெருக்குவதன் மூலமும், விற்பனை வரி வருவாயில் காணப்படும் சுணக்க நிலையை அகற்றுவதன் மூலமும், மாநில அரசின் வருவாயைப் பெருக்கி, டாஸ்மாக் கடைகளை மூடுவதனால் ஏற்படும் இழப்பை முழுவதுமாக ஈடுகட்ட முடியும் . இதற்கான மாற்று திட்டத்தை முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு 2012 -ம் ஆண்டு ஜூன் மாதம் காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியனால் அனுப்பி வைக்கப்பட்டது.
2016 சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பின்பு படிப்படியாக மதுக்கடைகளை மூடுவதாக வாக்குறுதி வழிங்கினார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா. அம்மாவின் வழியில் ஆட்சி செய்கிறோம் என்று அவ்வப்போது கூறிக்கொள்ளும் எடப்பாடியின் அரசு, அவர் சொன்னதை, இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி, மதுவிலக்கை இனியாவது அமல்படுத்த முன்வர வேண்டும். இந்திய அரசியலமப்புச் சட்டம் வலியுறுத்தும் மக்கள் நல அரசாக செயல்பட வேண்டும் என்று காந்திய மக்கள் இயக்க இளைஞரணி வலியுறுத்துகிறது”.
இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.