விழுப்புரம் மாவட்டத்தில் சமூகப் பரவலைத் தடுக்க செய்யவேண்டியது என்ன? 

விழுப்புரம் காமராஜர் வீதி  தனிமைப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. 
விழுப்புரம் காமராஜர் வீதி  தனிமைப்படுத்தி சீல் வைக்கப்பட்டுள்ளது. 
Updated on
2 min read

விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று முன்தினம் வரை 26 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களில் 2 பேர் உயிரிழந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு 16 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். நோய்த் தொற்று உள்ள 8 பேர் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் நேற்று முன்தினம் டெல்லியைச் சேர்ந்த நிதின் ஷர்மாவுக்கு கரோனா தொற்று இல்லை என உறுதி செய்யப்பட்டு அவர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின்படி விழுப்புரம் மாவட்டத்தில் 7 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர்களுக்கு தற்போது தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. நோய்த் தொற்று ஏற்பட்டு சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்த ஒருவர் உட்பட 2 பேர் டெல்லி மாநாட்டிற்குச் சென்றவர்கள் இல்லை என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கரோனா நோய்த் தொற்றைத் தடுக்கும்வகையில் மாவட்ட நிர்வாகம் எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து சமூக ஆர்வலர்கள் சிலரிடம் கேட்டோம்.

விழுப்புரம் நகருக்குள் வரும் அனைத்துச் சாலைகளும் முழுமையாக மூடப்படவேண்டும். அருகமை கிராம மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் கிடைக்க மாவட்ட நிர்வாகம் வழிவகை செய்யவேண்டும். நகரில் 6 நாட்களுக்கு வண்ண அட்டை உள்ளவர்கள் ஒரு அட்டைக்கு ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டது. ஆனால் அட்டைகள் கொண்டு வருபவர்களிடம் சோதனை மேற்கொள்ளப்படுவதில்லை. அவர்களின் வாகனங்களில் பெயிண்ட் தடவினாலும் அதனை உடனே வாகன ஓட்டிகள் பெட்ரோல் அல்லது தின்னர் கொண்டு அழித்துவிட்டு மீண்டும் வலம் வருகின்றனர்.

மேலும் வாகனத்தில் அரசின் பல்வேறு துறைகளில் பணியாற்றுவதாக போலி ஸ்டிக்கர் ஒட்டியும் சுற்றுகின்றனர். அவர்களைக் கட்டுப்படுத்தவேண்டும். விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிர்வாகத்திற்கும், மாவட்ட சுகாதாரத்துறைக்கும் இணக்கமான உறவு இல்லை. நாள்தோறும் காலை, மாலை வேளைகளில் வீடுதோறும் பால், மருந்துகள் கேட்போருக்கு அளிக்க வேண்டும். மளிகைக் கடைகள் ரூ.1,500க்கு பொருட்கள் வாங்கினால் மட்டுமே டோர் டெலிவரி செய்யப்படும் என்ற வணிக நிறுவனங்களின் நிபந்தனையைத் தளர்த்தவேண்டும்.

நகருக்குள் தேவையில்லாமல் யார் வெளியே வந்தாலும் அவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு, வழக்குப் பதிவு செய்யவேண்டும். இதனை மிகவும் கவனத்துடன் செயல்படுத்தவேண்டும். இக்கட்டுப்பாடுகள் தற்போது அவசியமானவை மட்டுமல்ல, அவசரமானதும் கூட. இதனை மேற்கொண்டால் மட்டுமே சமூகப் பரவலைத் தடுக்க முடியும் என்றனர்.

விழுப்புரம் நகரில் சமூகத் தொற்றுப் பரவலுக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளதா என ஆட்சியர் அண்ணாதுரையிடம் கேட்டபோது, அதற்கான வாய்ப்பு இல்லை. நீங்கள் குறிப்பிடும் 2 பேரும் ஏற்கெனவே நோய்த் தொற்று உடையவர்களுடன் தொடர்பில் இருந்துள்ளார்களா என விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது. விழுப்புரம் நகரில் 1.40 லட்சம் மக்கள் வசித்து வருகின்றனர். மாவட்ட நிர்வாகம் விழிப்புடன் செயல்பட்டு வருகிறது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in