

அந்தமான் கடற்பகுதியில் மீன்பிடிக்கச் சென்ற தமிழக மீனவா்கள் 300 போ் ஒரு மாத காலமாக அந்தமான் மீன்பிடித் துறைமுகத்தில் தவித்து வருகின்றனர். தங்களை மீட்க வேண்டும் என அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகப்பட்டிணம், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களைச் சார்ந்த மீனவர்கள் தினக்கூலிகளாக அந்தமானில் தங்கி மீன்பிடி தொழில் ஈடுபட்டு வந்தனர்.
இந்நிலையில், கடந்த மார்ச் 22 முதல் கரோனா பரவலைத் தடுக்க இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறபிக்கப்பட்டது. இதில் 40 படகுகளில் அந்தமான் மீன்பிடித் துறைமுகத்துக்கு கரை திரும்பிய 300 மீனவர்களும் தமிழகம் திரும்ப முடியாமல் துறைமுகத்திலேயே தங்கி உள்ளனர்.
தற்போது ஊரடங்கு நீட்டிக்கப்பட்டு அனைத்துப் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளதால் மீனவர்கள் அந்தமான் துறைமுகத்தை விட்டு வெளியேற முடியாத நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனா்.
மேலும், தங்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் இன்றியும், போதிய உணவு கிடைக்காமலும் கடந்த ஒரு மாத காலமாகத் தவித்து வருவதாகவும், தங்களை மீட்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவா்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
எஸ். முஹம்மது ராஃபி