

மருத்துவருக்கு நேர்ந்தது போல் இனி யாருக்கும் நேரக்கூடாது. தமிழகத்தில் கரோனாவால் எவரேனும் பாதிக்கப்பட்டு உயிரிழந்தால் அவர்களின் உடலுக்கு பாதுகாப்புடன், மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடைபெறுவதை தமிழக அரசு உறுதி செய்துகொள்ள வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கோரிக்கை வைத்துள்ளார்.
ஜி.கே.வாசன் இன்று விடுத்துள்ள அறிக்கை:
“தமிழகத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் கண்டறிவதற்கும், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களை குணப்படுத்துவதற்கும் அரசு மருத்துவர்களும், செவிலியர்களும், மருத்துவமனை ஊழியர்களும் மேற்கொள்ளும் பணி அர்ப்பணிப்பான சேவைப் பணியாகும்.
இதுவரையில் கரோனா தொற்றால் சுமார் 1,447 பேர் பாதிக்கப்பட்டிருப்பதும், 15 பேர் உயிரிழந்திருப்பதும் வேதனையாக இருக்கிறது. வருத்தம் அளிக்கிறது. குறிப்பாக கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளவர்களைக் குணப்படுத்த வேண்டும் என்பதற்காக தங்கள் உயிரைப் பணயம் வைத்து பணியாற்றுபவர்களில் மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் ஆகியோர் மிக மிக முக்கியமானவர்கள்.
அப்படி இருக்கும்போது சென்னையில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யவிடாமல் போராட்டம் செய்த பொதுமக்களின் செயல் கண்டிக்கத்தக்கது. கரோனா தொற்று பாதித்த நபர்களுக்கு மருத்துவம் பார்ப்பது மருத்துவர்கள்தான். அப்படி மருத்துவம் பார்த்த மருத்துவரே நோய் பாதிக்கப்பட்டு இறந்திருக்கிறார். இப்படி தன் உயிரைக்கொடுத்து வேலை பார்த்த மருத்துவர் உடலை அடக்கம் செய்ய மறுத்த மக்கள் கண்டிக்கத்தக்கவர்கள்.
இவர்களிடம் போதிய விழிப்புணர்வும், மனிதாபிமானமும் இல்லாத காரணத்தால் இறந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்யத் தடையாக இருந்திருக்கிறார்கள். இச்செயல் மிகவும் வேதனைக்குரியது, வருத்தம் அளிக்கிறது. பொதுவாக இறந்தவர்களுக்கு உரிய மரியாதை செய்து அடக்கம் செய்வதுதான் வழக்கமானது.
இப்போதைய அசாதாரண சூழலில் நோய் தாக்கத்தால் பாதிக்கப்பட்டு இறக்கும்போது அவர்களின் உடலுக்குப் பாதுகாப்பு கொடுத்து, மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்ய வேண்டும். இதற்காக காவல்துறையும் விழிப்புடன், தகுந்த பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். பொது மக்களும் தற்போதைய சூழலில் நோயினால் பாதிக்கப்படுபவர்களும், உயிரிழப்பவர்களும் நம்மைப் போன்றவர்களே என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எனவே உயிரிழந்த மருத்துவரின் உடலை அடக்கம் செய்ய மறுத்து இதுபோன்ற ஒரு செயல் இனிமேல் தமிழகத்தில் எங்கும் நடைபெறக்கூடாது. இதற்காக தமிழக அரசு பொதுமக்களிடம் போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களும் விழிப்புணர்வுடன் செயல்பட வேண்டும். கரோனாவால் உயிரிழப்பு ஏற்படக்கூடாது என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
இருப்பினும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு எவரேனும் உயிரிழந்தால் அவரின் உடலுக்கு பாதுகாப்புடன், மரியாதையுடன், இறுதிச்சடங்கு நடைபெற வேண்டும் என்பதில் தமிழக அரசு உறுதியாக இருக்க வேண்டும் என்று தமாகா சார்பில் கேட்டுக்கொள்கிறேன்”.
இவ்வாறு ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.