

சிவகங்கை மாவட்டத்தில் ரேஷன்கடைகளுக்கு அனுப்ப வேண்டிய பொருட்களை சிவகங்கை மாவட்ட மொத்த கூட்டுறவு விற்பனை பண்டகசாலை (பாம்கோ) நிறுவனம் வெளிச்சந்தையில் விற்பனை செய்ததாக திமுக புகார் தெரிவித்துள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் பாம்கோ நிறுவனம் நுகர்பொருள் வாணிப கழகத்தில் இருந்து அரிசி, சர்க்கரை, கோதுமை, பருப்பு வகைகளை கொள்முதல் செய்து ரேஷன்கடைகளுக்கு விநியோகித்து வருகிறது.
மேலும் வருமானத்தை அதிகரிக்க ரவை, மைதா, ஆட்டா போன்ற பொருட்களை பாம்கோ நிறுவனம் தனியாரிடம் கொள்முதல் செய்து ரேஷன்கடைகள் மூலம் பொதுமக்களிடம் விற்பனை செய்கிறது.
இதில் அரை கிலோ ரவை ரூ.28, மைதா ரூ.26, ஆட்டா ரூ.24-க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இந்நிலையில் கரோனா வைரஸ் தொற்றால் ரேஷன்கடைகளில் அனைத்து பொருட்களும் இலவசமாக வழங்கப்படுகின்றன.
இந்தசமயத்தில் ரேஷன்கடைகளில் ரவை, மைதா, ஆட்டா போன்றவற்றை விற்றால் தேவையில்லாத சர்ச்சை ஏற்படும் என்பதால், அவற்றை விற்பனை செய்ய வேண்டாம் என பாம்கோவிற்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டது.
இதையடுத்து ஏப்ரல் மாதத்திற்காக கொள்முதல் செய்யப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள ரவை, மைதா ஆட்டா பாம்கோ குடோனில் வைக்கப்பட்டு இருந்தன.
இதுதவிர சிறப்பு அங்காடி, சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி போன்ற இடங்களுக்கு விற்பனை செய்தவற்காக வாங்கப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள உளுந்து மூடைகளும் குடோனில் இருந்தன.
வெளிச்சந்தையில் அத்தியாவசிப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவுவதால் விலையும் உயர்ந்துள்ளது. இதையடுத்து பாம்கோ குடோனில் இருந்து ரவை, மைதா, ஆட்டா, உளுந்து போன்றவற்றை சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருவாடானை வியாபாரிகளிடம் கூடுதல் விலைக்கு பாம்கோ அதிகாரிகள் விற்பனை செய்துள்ளனர்.
இதுகுறித்து திமுக சிவகங்கை நகரச் செயலாளர் துரைஆனந்த் மாவட்ட ஆட்சியர் ஜெயகாந்தனிடம் புகார் தெரிவித்தார். மேலும் அவர் கூறியதாவது: வெளிசந்தை வியாபாரிகளிடம் விற்பனை செய்துவிட்டு சிவகங்கை, காளையார்கோவில் பகுதிகளைச் சேர்ந்த சில ரேஷன்கடைகள் மூலம் விற்பனை செய்ததாக ஆவணம் தயாரித்துள்ளனர். இதன்மூலம் பல லட்சம் ரூபாய் முறைகேடு நடந்துள்ளது. முறைகேடு செய்தோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், என்று கூறினார்.
இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ஆரோக்யசுகுமார் கூறுகையில், ‘புகார் குறித்து விசாரித்து வருகிறோம்,’ என்று கூறினார்.