

‘‘இறந்த மருத்துவர் உடலை அடக்கம் செய்யவிடாமல் எதிர்ப்பு தெரிவிக்கும் மக்கள், கரோனாவுக்கு எதிராக போராடும் அரசு மருத்துவர்களுக்கு தரும் பரிசு இதுதானா?, ’’என அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் டாக்டர் கே.செந்தில் தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார்.
அவர் கூறியதாவது:
சென்னையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்தபோது ‘கரோனா’ தொற்று ஏற்பட்டு இறந்த டாக்டர் சைமனுக்கு அரசு மருத்துவர்கள் சங்கம் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறது.
இவரது உடலை அடக்கம் செய்ய விடாமல் மனிதநேயமற்ற முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்களை வன்மையாகக் கண்டிக்கிறோம்.
இதுபோன்ற நிகழ்வு தொடர்ச்சியாக மூன்றாவது முறையாக நடந்துள்ளது. அதனால், தமிழக அரசு இத்தகைய மருத்துவர்கள் நல்ல அடக்கத்திற்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். நோய் தொற்று குறைவாக இருக்கும்போதே நோயாளிகளுக்கு மருத்துவம் பார்க்கும் மருத்துவர்களுக்கு தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது.
ஆனாலும் மருத்துவர்கள் அதை பற்றி கவலைப்படாமல் அர்ப்பணிப்பு உணர்வோடு பணிபுரிகின்றனர். தனியார் மருத்துவர்கள் மூடப்பட்டநிலையில் அனைத்து நோயாளிகளும் அரசு மருத்துவமனைக்கு வருகின்றனர்.
அதனால், அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் வேலைப்பழு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள், மருத்துவர்கள் அடக்கத்திற்கே எதிர்ப்பு தெரிவிக்கும்போது நோயாளிகள் மீது மருத்துவர்களுக்கே ஏற்படும்நிலை உருவாகும்.
‘கரோனா’ வைரஸ்க்கு எதிராக மருத்துவர்கள் தங்கள் உயிரை பனையம் வைத்து பணிபுரிவதற்குமக்கள் தரும் பரிசு இதுதானா என கவலை அடைய வைத்துள்ளது. இதுபோன்ற சம்பவங்களால் மருத்துவர்கள் தங்கள் பாதுகாப்பு முக்கியம் என்று பணிபுரிய ஆரம்பித்தால் மக்கள் நிலை மிக மோசமாகிவிடும்.
குறைவான பாதுகாப்பு கவசங்களை வைத்துதான் அரசு மருத்துவர்கள் ‘கரோனா’வுக்கு எதிராக போராடி மக்களுக்கு சேவை செய்து வருகின்றனர்.
அதனால், ‘கரோனா’ சேவை செய்த பல மருத்துவர்களுக்கு இந்த தொற்று ஏற்பட்டு அவர்களும், அவர்கள் குடுமப்த்தினரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதனால், அரசு தரமான பாதுகாப்பு உபகரணங்களை பணி செய்யும் மருத்துவர்களுக்கு வழங்கிட வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.