10-ம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்

10-ம் வகுப்புத் தேர்வு கட்டாயம் நடக்கும்: அமைச்சர் செங்கோட்டையன்
Updated on
1 min read

10-ம் வகுப்புப் பொதுத்தேர்வுகள் ஊரடங்கு முடிந்தவுடன் கட்டாயம் நடக்கும். ஒருநாள் நடக்காமல் போன பிளஸ் 2 தேர்வும் நடக்கும் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னையில் இன்று அவர் அளித்த பேட்டி:

“10-ம் வகுப்புத் தேர்வு நடைபெறும். 10 வகுப்புத் தேர்வுகளில் பெறும் மதிப்பெண் மாணவர்களின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் என்பதால் அரசு இந்த முடிவை எடுத்துள்ளது. மே 3-ம் தேதிக்குப் பிறகு ஊரடங்கு தடை நீக்கப்பட்ட பிறகு 10-ம் வகுப்புத் தேர்வை எப்படி நடத்தலாம் என்று முதல்வரின் கவனத்துக்குக் கொண்டு சென்று பின்னர் தேதி அறிவிக்கப்படும்.

இப்போதைய நிலைக்கு கோடை காலத்தில் மாணவர்களுக்கு 3 மணி நேரம் தேர்வு நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. ஒருநாள் விட்டு ஒருநாள் தேர்வு நடத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 3-ம் தேதிக்குப் பிறகு சகஜமான நிலை ஏற்படும். அதன் பின்னர் மாணவர்களுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும்.

தேர்வு எழுதும் மாணவர்களுக்கிடையே இடைவெளி இருக்கும். இது முடிந்தவுடன் 12-ம் வகுப்புத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணியும் தொடங்கும். ஒருநாள் விட்டுப்போன பிளஸ் 2 தேர்வு மீண்டும் ஒரு நாள் நடத்தப்படும்.

தனியார் பள்ளிகள் கட்டாயமாக கட்டணம் வசூல் செய்யக்கூடாது. அதை மீறி யாராவது கட்டாயம் வசூல் செய்தால் அது அரசின் கவனத்துக்கு வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும்”.

இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in