

வர்த்தக அமைப்பினர், அரசியல் கட்சியினர் என பலரது கோரிக்கைகளையும் பரிசீலிக்காமல் மத்திய அரசு அறிவித்தபடி கொடைரோடு சுங்கச்சாவடியில் கட்டண வசூல் இன்று தொடங்கியது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைரோடு அருகே மதுரை-திண்டுக்கல் சாலையில் சுங்கச்சாவடி அமைந்துள்ளது. ஊரடங்கு தொடங்கியவுடன் சுங்கச்சாவடிகள் மூடப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது.
இந்நிலையில் ஊரடங்க தளர்வு ஏப்ரல் 20 ம் தேதிமுதல் நடைமுறைக்குவரும் என அறிவித்த மத்திய அரசு சுங்கச்சாவடிகளை திறக்க உத்தரவிட்டது. இதையடுத்து இன்று முதல் தேசிய நெடுஞ்சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள சுங்கச்சாவடிகள் இயங்கத்தொடங்கி வசூல் செய்ய தொடங்கின.
மிகவும் குறைந்த எண்ணிக்கையிலான வாகனங்கள் மட்டுமே சுங்கச்சாவடியை கடந்து சென்றன. பெரும்பாலும் சரக்கு ஏற்றிச்செல்லும் லாரிகளே சென்றன கொடைரோடு அருகே அமைந்துள்ள சுங்கச்சாவடியில் வழக்கமான கட்டணமே வசூலிக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற ராணுவவீரர்கள், போலீஸார் சுங்கச்சாவடியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
வழக்கமான வாகனநெரிசல் இல்லாததால் கட்டணம் செலுத்த காத்திராமல், வந்த ஒரு சில வாகனங்களும் கட்டணம் செலுத்திவிட்டு விரைவில் சுங்கச்சாவடியை கடந்துசென்றன.