மொட்டை மாடியில் பட்டம் விடுவதால் அடிக்கடி மின் தடை: பொதுமக்களுக்கு மின்வாரியம் வேண்டுகோள் 

தூத்துக்குடியில் பட்டம் அறுந்து நூல் சிக்கியதால் ஏற்பட்ட மின் கோளாறை முகக்கவசம் அணிந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளர்கள். 
தூத்துக்குடியில் பட்டம் அறுந்து நூல் சிக்கியதால் ஏற்பட்ட மின் கோளாறை முகக்கவசம் அணிந்து சரி செய்யும் பணியில் ஈடுபட்ட மின்வாரிய பணியாளர்கள். 
Updated on
1 min read

கரோனா பரவலைத் தடுக்கும் பொருட்டு நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் மூடப்பட்டுள்ளதால் மாணவ, மாணவியர் வீடுகளில் முடங்கி கிடக்கின்றனர். அவர்கள் பொழுதுபோக்கிற்காக பல்வேறு விளையாட்டுகளை விளையாடி வருகின்றனர். பல மாணவர்கள் தங்கள் வீடுகளின் மொட்டை மாடிகளில் இருந்து பட்டம் பறக்கவிடுகின்றனர்.

இவ்வாறு பறக்கவிடும் பட்டம் நூல் அறுந்து மின் கம்பிகளில் சிக்கிக் கொள்கின்றன. இவ்வாறு மின் கம்பிகளில் நூல் சிக்குவதால் அடிக்கடி மின் தடை ஏற்படுகிறது.

இதனை சரி செய்வதில் மின்வாரிய ஊழியர்களுக்கு பல்வேறு சிரமங்கள் ஏற்படுகின்றன. எனவே, மொட்டை மாடிகளில் இருந்து பட்டங்கள் விடுவதை தவிர்க்க வேண்டும் மின்வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் ஜெ.அ.ஞானேஸ்வரன் கூறியதாவது:

தற்போது உள்ள சூழ்நிலையில் பொதுமக்கள் அவர்களின் வீட்டு மொட்டை மாடி, உயரமான கட்டிடத்தில் இருந்து பட்டம் விடும்போது அவற்றில் ஒருசில பட்டம் அறுந்து, பட்டத்துக்கான நூல் உயர், தாழ்வழுத்த மின்பாதை மற்றும் மின்மாற்றி கட்டமைப்பில் விழுந்து மின்பாதையில் ஷாட் சர்க்யூட் ஏற்படுவதால் மின்தடை ஏற்படுவதுடன் மின் விபத்துகள் ஏதேனும் ஏற்பட வாய்ப்புள்ளது.

எனவே, பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர் மின்பாதையில் பட்டம் அறுந்து விழுவதை தவிர்க்கும் பொருட்டு, அவரவர் தம் குழந்தைகளுக்கு பாதுகாப்பு தொடர்பான தகுந்த அறிவுரை வழங்கி பட்டம் விடுவதை தடுத்து, பொதுமக்கள் மற்றும் மின்நுகர்வோர்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க ஒத்துழைப்பு தரும்படி அன்புடன் கேட்டுக் கொள்ளகிறேன் என்றார் அவர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in