

சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூரில் மேலும் ஒருவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதியானது. அதே பகுதியில் அமைச்சர் பாஸ்கரன் நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டத்தில் ஏற்கெனவே திருப்பத்தூரில் 8 பேர், இளையான்குடி, தேவகோட்டை, காரைக்குடியில் தலா ஒருவர் என 11 பேருக்கு கரோனா தொற்று இருந்தது.
அவர்கள் சிவகங்கை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 4 பேர் குண்மடைந்தனர். மற்றவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
கரோனா தொற்று உள்ளோர் வசித்த பகுதிகளை சீல் வைத்து முழுமையாக கண்காணிக்க அரசு உத்தரவிட்டுள்ளது.
இதையடுத்து திருப்பத்தூரில் அனைத்து கடைகளும் அடைக்க உத்தரவிடப்பட்டு, திடீரென விலக்கி கொள்ளப்பட்டது. இதனால் கரோனா தொற்று பாதித்தோர் வசித்த பகுதிகளிலும் வாகனங்கள் தாராளமாக சென்று வருகின்றன.
சுகாதாரத்துறையினர் நோய் தொற்று உள்ளவர்களின் உறவினர்கள், நண்பர்கள் என அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களை கண்டறிந்து பரிசோதனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று இரவு திருப்பத்தூர் புதுத்தெருவில் மேலும் ஒருவருக்கு கரோனா இருப்பது பரிசோதனையில் தெரியவந்தது. அதே பகுதியில் இருதினங்களுக்கு முன்பு அமைச்சர் பாஸ்கரன், ஆட்சியர் ஜெயகாந்தன் நிவாரண உதவிகளை வழங்கினர்.
தற்போது அப்பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கு கரோனா இருப்பது உறுதியானதால் அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்றோருக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் அப்பகுதி மக்களிடம் ஒருவித அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல் கரோனா தொற்று உள்ளோர் வசிக்கும் பகுதிகளில் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்த வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.