

புதுச்சேரி மாநிலத்தில் மதுப்பிரியர்களுக்கு தற்காலிகமாக ஆறுதல் அளித்து வரும் கள்ளுப் பானைகளையும் உடைத்துக் காலி செய்கிறது புதுச்சேரி காவல்துறை.
புதுச்சேரி மாநிலத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து மதுக்கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. ஆனாலும், பல மதுக்கடைகளில் இரவில் பூட்டை உடைத்து மது பாட்டில்களை எடுத்து கள்ளச் சந்தையில் விற்று வருகிறார்கள். மது கிடைக்காத மதுப்பிரியர்கள் கிராமங்களில் பனை மரங்கள் மூலம் இறக்கப்படும் கள்ளைத் தேடிப் படையெடுக்கிறார்கள். இதனால் அங்கு தனிமனித விலகல், சுகாதாரம் ஆகியவை காற்றில் பறக்கின்றன.
இதனால் கள் விற்பனையையும் கட்டுப்படுத்தும் முயற்சியில் புதுச்சேரி காவல்துறை இறங்கியிருக்கிறது. இதற்காக கடந்த மூன்று நாட்களாக கள் இறக்கப்படும் இடங்களை தேடிச் சென்று அவற்றை காவல்துறையினர் அழித்து வருகின்றனர்.
இன்று காலை அபிஷேகபாக்கம் ஏரிக்கரைக்குச் சென்ற தவளக்குப்பம் காவல் ஆய்வாளர் செந்தில்குமார் தலைமையிலான போலீஸார் அங்கு கள் இறக்க கட்டப்பட்டிருந்த பானைகளை கவன் மூலமாக உடைத்தனர். பின்னர், கள் இறக்கும் மரமேறிகள் மூலமாக இருநூற்றுக்கும் மேற்பட்ட பனை மரங்களில் கட்டப்பட்டிருந்த கள் பானைகளையும் இறக்கி உடைத்து அப்புறப்படுத்தினர்.
இதனால், இந்த இயற்கை பேரிடர் காலத்தில் தங்களுக்குக் கைகொடுத்த கள்ளும் கைவிட்டுப் போகிறதே என்று புதுச்சேரி அதை ஒட்டிய தமிழக பகுதி மதுப்பிரியர்கள் புலம்பி வருகின்றனர்.