

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் பகுதியில் வறட்சி காரணமாக கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வெங்கலக் குறிச்சி, கீழத்தூவல், மேலத்தூவல் உள்ளிட்ட 5 கிராமங்களைச் சேர்ந்த 20 குடும்பங்களைச் சேர்ந்தோர் பிழைப்புத்தேடி மேற்கு வங்க மாநிலம், டார்ஜிலிங் மாவட்டம் சிலிகுரி பகுதிக்குச் சென்றனர். இவர்கள் அங்கு தெருவோர கடைகளை நடத்தி வருகின்றனர்.
தற்போது ஊரடங்கால் இந்த 20 குடும்பங்களைச் சேர்ந்த 62 பேர் உணவு கிடைக்காமல் சிரமப்படுவதாக முதுகுளத்தூரில் உள்ள உறவினர்களுக்கு வாட்ஸ் ஆப் மூலம் தெரிவித்துள்ளனர். அந்த வீடியோ பதிவில் திருமுருகன் என்பவர் கூறியிருப்பதாவது:
கடந்த 5 நாட்களாக உண வின்றி சிரமப்படுகிறோம். குடும்ப அட்டை போன்ற ஆதாரங்கள் இல்லாததால், மேற்கு வங்க அரசிடமும் உதவி பெற முடியவில்லை. சொந்த ஊருக்கும் வர முடியாமல் தவிக்கிறோம். தமிழக முதல்வர் எங்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.