Published : 20 Apr 2020 07:36 AM
Last Updated : 20 Apr 2020 07:36 AM

அரசின் அறிவுரை, மருத்துவர்களின் ஆலோசனையை பின்பற்றியதால் கரோனா காலனை விரைவாக வென்ற கல்லூரி இயக்குநர்- ‘ஆறுதலான பேச்சு குணமடைந்துவிடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது’

உலகையே அச்சுறுத்தி வரும்கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ சிகிச்சையால் குணமடைந்து, 16 நாட்களில் வீடு திரும்பியுள்ளார் திருச்சி சாத்தனூர் அய்மான் மகளிர் கலை - அறிவியல் கல்லூரியின் இயக்குநர் எம்.சேக் முகம்மது(68).

16 நாட்களில் கரோனா என்ற காலனை வென்ற தனது அனுபவங்கள் குறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் அவர் கூறியது:

டெல்லியில் மார்ச் 21 முதல் 24 வரை நடைபெற்ற கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்தேன். அரசின் உத்தரவின்பேரில் மார்ச் 23-ம்தேதி பிற்பகல் 3 மணியுடன் கருத்தரங்கை நிறைவு செய்துவிட்டனர்.

மறுநாள் ஊரடங்கு உத்தரவு அமலாவதையொட்டி, விமானம் மூலம் அங்கிருந்து புறப்பட்டு 24-ம் தேதி காலை 9 மணியளவில் சென்னையில் வந்து இறங்கினோம். விமான நிலையத்தில் பயணிகள் அனைவரையும் மருத்துவக் குழுவினர் பரிசோதனை செய்தனர். இதில் எனக்கு கரோனா பாதிப்புஇல்லை என்று கூறினர். இருப்பினும், டெல்லி கருத்தரங்கில் பங்கேற்ற சிலருக்கு கரோனாபாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள தால், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ளுமாறு கூறினர்.

இதையடுத்து, திருச்சி சென்றவுடன் மனைவியை மாடியில் வசிக்கும் மகன் வீட்டுக்குச் செல்லுமாறு கூறிவிட்டு, என்னை தனிமைப்படுத்திக் கொண்டேன்.

இதற்கிடையே, டெல்லி கருத்தரங்கில் பங்கேற்றவர்களை மருத்துவ பரிசோதனைக்கு வருமாறு அரசு அறிவித்ததையடுத்து, ஏப்.1-ம் தேதி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவமனையில் நானாக போய்ச் சேர்ந்தேன். அங்கு எனக்கு கரோனா தொற்று இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.

இதனால், லேசான அதிர்ச்சி அடைந்த என்னை் கவனித்த மருத்துவர்கள், மருத்துவ பரிசோதனையில் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டாலும் தலைவலி, அடி வயிற்றில் வலி, மூச்சுத் திணறல், தும்மல், வறட்டு இருமல் போன்ற அறிகுறிகள் இல்லையெனில் பயப்பட வேண்டாம் என்று தைரியமூட்டினர்.

24 மணி நேர கண்காணிப்பு

தொடர்ந்து, தொற்று உறுதி செய்யப்பட்ட அனைவரையும் தனி அறைகளில் தங்கவைத்து உடனடியாக சிகிச்சையைத் தொடங்கினர். திருச்சியில் இருந்து டெல்லி சென்ற 105 பேரும் ஓரிரு நாட்களில் சிகிச்சைக்கு வந்து சேர்ந்துவிட்டனர்.

சத்தான உணவு, பால், பழங்கள், மருந்து, மாத்திரைகள், 24 மணி நேர மருத்துவ கண்காணிப்பு, மருத்துவர்கள்- செவிலியர்களின் கனிவான - ஆறுதலானபேச்சு ஆகியன குணமடைந்து விடுவோம் என்ற நம்பிக்கையை ஏற்படுத்தியது.

குறிப்பாக, சிகிச்சையில் இருந்தஒவ்வொருவரையும் மனநல மருத் துவர்கள் தினமும் காலை, மாலை இருவேளையும் செல்போனில் தொடர்புகொண்டு பேசி மனநல ஆலோசனைகளை வழங்கினர். இதனால், சிகிச்சையில் இருந்த எங்களுக்கு மன அழுத்தமோ, எந்தவித பிற்போக்கு எண்ணங் களோ ஏற்படவில்லை.

மேலும், மாவட்ட ஆட்சியர் சு.சிவராசு, மருத்துவமனை முதல்வர் கே.வனிதா உள்ளிட்டோர் தினமும் தொடர்புகொண்டு நலம்விசாரித்தனர். இதைத் தொடர்ந்து,சிகிச்சையால் என்னுடன் சேர்ந்துமுழுமையாகக் குணமடைந்த 32 பேர் ஏப்.16-ம் தேதி வீட்டுக்குஅனுப்பி வைக்கப்பட்டோம். மருத் துவர் களின் ஆலோசனையின்படி வீட்டில் தனிமையைக் கடை பிடித்து வருகிறேன்.

அரசின் அறிவுரை, மருத்துவர்களின் ஆலோசனையை ஏற்று சிகிச்சைக்கு முழுமையாக ஒத்துழைத்ததால் இறைவன் அருளால் விரைவில் குணமடைந்து வீடு திரும்பினோம். கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர் களுக்கு பிளாஸ்மா சிகிச்சைக்கு உதவ நான் தயாராக உள்ளேன் என்றார்.

விளைவுகள் வேறு விதமாக ஆகியிருக்கும்

சேக் முகம்மது மேலும் கூறியபோது, “சிகிச்சைக்கு சேர்ந்த 10-வது நாளில், டெல்லி சென்று திரும்பியவர்களின் குடும்பத்தினரையும் அழைத்து வந்து மருத்துவ பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டது. இதில் சிகிச்சையில் இருந்த சிலருக்கு உடன்பாடு இல்லை.கரோனா தொற்றால் விலை மதிப்பற்ற உயிர் போய்விடக் கூடாது என்பதில் அரசு உறுதியாக இருப்பதையும், மருத்துவ பரிசோதனை செய்யாமல் இருப்பது சரியல்ல என்றும் என்னுடன் சிகிச்சையில் இருந்த அனைவருக்கும் புரியவைத்தேன்.இதையடுத்து, நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட 39 பேரின் குடும்ப உறுப்பினர்கள் 115 பேருக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. இதில், ஒன்றரை வயது குழந்தை உட்பட 3 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, அவர்கள் உடனடியாக சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். மருத்துவ பரிசோதனைக்கு விடாப்பிடியாக மறுப்பு தெரிவித்திருந்தால், இந்த பாதிப்பை கண்டுபிடிக்க முடியாமல் விளைவுகள் வேறு விதமாக ஆகியிருக்கும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x