

கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்திய இளைஞர்களால் வழிகாட்ட முடியும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
கரோனா வைரஸால் பல்வேறு இன்னல்களை அனுபவித்து வருகிறோம். அனைவரின் வாழ்க்கை முறையும் முற்றிலுமாக மாறியுள் ளது. நமது வீடு, அலுவலமாக மாறியுள்ளது. ஆன்லைன் மூலம் அலுவலக ஆலோசனைக் கூட்டங்கள் நடைபெறுகின்றன.
புதிய சூழலுக்கு நான் மாறிவிட்டேன். அமைச்சர்கள், அதிகாரிகள், உலக தலைவர்கள், தன்னார்வ தொண்டு நிறுவன பிரதிநிதிகளுடன் காணொலி காட்சி மூலம் உரையாடுகிறேன். நாள்தோறும் பல்வேறு தரப்பு மக்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு அவர்களின் கருத்துகளை கேட்டு அறிகிறேன். எல்லாமே புதுமையாக இருக்கிறது.
இக்கட்டான சூழலை நமது வலுவான உள்கட்டமைப்பு மூலமே எதிர்கொண்டு வருகிறோம்.
டிஜிட்டல் பணப் பரிமாற்றம்
அனைத்து கடைக்காரர்களும் முழுமையாக டிஜிட்டல் முறைக்கு மாற வேண்டும். மருத்துவத் துறையில் டெலிமெடிசின் நடைமுறை அத்தியாவசிய தேவையாக மாறியுள்ளது. இந்த திட்டத்தால் உலகம் முழுவதையும் எளிதாக சென்றடைய முடியும்.
இந்த நேரத்தில் பருவநிலை மாற்றத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அன்னை பூமியை காப்பதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
கரோனா வைரஸ் நமக்கு ஒரு பாடத்தை கற்பித்துள்ளது. குறைந்த விலையில், அதிக மக்களை சென்றடையும் வகையில் மருத்துவ வசதிகள், கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். இதில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் நாம் வழிகாட்டியாக இருக்க முடியும்.
கரோனா வைரஸ் பரவுவதை முழுமையாக கட்டுப்படுத்த வேண்டும். நாம் யார், நமது திறமை, தகுதி என்ன என்பதை உலகத்துக்கு வெளிப்படுத்த வேண்டும். கரோனா வைரஸுக்கு எதிரான போரில் ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்திய இளைஞர்களால் வழிகாட்ட முடியும்.
நாட்டு மக்கள் அனைவரும், விவசாயிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தர வேண்டும். ஒவ்வொரு சவாலும் நமக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. கரோனா வைரஸ் சவாலையும் நாம் அவ்வாறே எதிர்கொள்ள வேண்டும். புதிய வாய்ப்புகளை கண்டறிய வேண்டும்.
இனம், மதம், நிறம், சாதி, மொழி, எல்லை பார்த்து கரோனா வைரஸ் தொற்றவில்லை. இந்த நேரத்தில் நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். சகோதரத்துவத்தைப் பேண வேண்டும். ஒட்டுமொத்த உலகத்துக்கும் இந்தியா முன்னுதாரணமாக திகழ வேண்டும். நாம் ஒன்றாக எழுவோம். சூழ்நிலையை நமக்கு சாதகமாக்குவோம்.
உடல் நலனை பேண அனைவரும் யோகாசனம் செய்யுங்கள். பாரம்பரிய வைத்திய முறைகளைப் பின்பற்றுங்கள். ஆரோக்கிய சேது செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
முதல்வரிடம் பிரதமர் உறுதி
கரோனா வைரஸை கண்டறிய தமிழகத்துக்கு கூடுதல் விரைவு பரிசோதனை கருவிகள் வழங்குவதாக முதல்வரிடம் பிரதமர் மோடி தொலைபேசியில் உறுதியளித்தார்.
இதுதொடர்பாக தமிழக அரசு நேற்று இரவு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பிரதமர் நரேந்திர மோடி ஞாயிற்றுக்கிழமை (நேற்று) இரவு 7.30 மணியளவில் முதல்வர் பழனிசாமியை தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசினார். அப்போது தமிழகத்தில் கரோனா தடுப்பு பணிகள் குறித்து கேட்டார். அதற்கு முதல்வர், தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் கரோனா தடுப்பு பணிகள் குறித்து விளக்கமாக தெரிவித்தார். மேலும், தமிழகத்தில் அதிகமான பரிசோதனை செய்ய வேண்டியுள்ளதால் கூடுதல் விரைவு பரிசோதனை கருவிகள் (ரேபிட் டெஸ்ட் கிட்ஸ்) வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தார். அதற்கு பிரதமர், கூடுதல் பரிசோதனை கருவிகள் வழங்குவதாக தெரிவித்தார்.