Published : 27 May 2014 09:16 AM
Last Updated : 27 May 2014 09:16 AM

உள்வளைந்த கணுக்கால் சிகிச்சை மையம் அரசு பொது மருத்துவமனையில் திறப்பு

ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் பிறவி உள்வளைந்த கணுக்கால் சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் திங்கள்கிழமை திறந்து வைத்தார்.

சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனை முடநீக்கியல் மற்றும் விபத்தியல் உயர்துறையில் பிறவி உள்வளைந்த கணுக்கால் சிகிச்சை மையம் புதிதாக அமைக்கப் பட்டுள்ளது. இந்த மையத்தின் திறப்பு விழா திங்கள்கிழமை நடந்தது. விழாவுக்கு மருத்துவ மனை டீன் விமலா தலைமை தாங்கினார். முடநீக்கியல் மற்றும் விபத்தியல் உயர்துறை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் தீன் முகம்மது இஸ்மாயில் முன்னிலை வகித்தார். புதிய சிகிச்சை மையத்தை சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கர் திறந்து வைத்தார்.

விழாவில் அமைச்சர் பேசியதாவது:

தமிழக அரசுடன் க்யூர் இன்டர்நேஷனல் இந்தியா செய்துள்ள ஒப்பந்தத்தின்படி பிறவி உள்வளைந்த கணுக்கால் பாத குறைபாட்டை ஒழிக்க மாநில அளவிலான திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 6 அரசு மருத்துவமனைகளில் உள்வளைந்த கணுக்கால் சிகிச்சை மையம் தொடங்கப்பட்டுள்ளது. சென்னையில் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனை மற்றும் ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே இந்த மையம் ஏற்படுத்தப் பட்டுள்ளது. இப்போது மூன்றா வதாக ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் திறக்கப் பட்டுள்ளது.

24 மணி நேரம் செயல்படும்

பிறக்கும் 750 குழந்தைகளில் ஒரு குழந்தை, இந்த குறைபாட்டால் பாதிக்கப்படுகிறது. ஆண்டுக்கு உலக அளவில் 1.5 லட்சம் முதல் 3 லட்சம் குழந்தைகளும், இந்தியாவில் 30 ஆயிரம் குழந்தைகளும் தமிழகத்தில் ஆண்டுக்கு 2,700 குழந்தைகளும் இந்தப் பிரச்சினையால் பாதிக்கப் படுகின்றன.

உள்வளைந்த கணுக்கால் குறைபாடு போலியோ பாதிப்பு இல்லை. தசை நார் அறுவைச் சிகிச்சை மற்றும் இதற்கான பிரத்தியேக காலணிகளை போட்டு நடக்க வைப்பதன் மூலம் இதை குணப்படுத்தலாம். இந்த சிகிச்சை மையம் செவ்வாய்க்கிழமைகளில் 24 மணி நேரமும் செயல்படும்.

ரூ.1 லட்சம் செலவு

தமிழகத்தில் உள்வளைந்த கணுக்கால் குறைபாட்டால் பாதிக்கப்பட்ட 1,930 குழந்தை கள் சிகிச்சை மூலம் குணப்படுத் தப்பட்டுள்ளனர். சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல மருத்துவ மனையில் மட்டும் 659 குழந்தைகள் சிகிச்சை பெற்றுள்ளன. இந்த சிகிச்சைக்கு தனியார் மருத்துவ மனையில் ரூ.25 ஆயிரம் முதல் ரூ.50 ஆயிரம் ஆகும். தசை நார் அறுவைச் சிகிச்சை செய்ய வேண்டுமானால் ரூ.1 லட்சம் வரை செலவாகும். இவ்வாறு அமைச்சர் விஜய பாஸ்கர் தெரிவித்தார்.

கருவில் கண்டுபிடிக்கலாம்

முடநீக்கியல் மற்றும் விபத்தியல் உயர்துறை இயக்குநர் (பொறுப்பு) டாக்டர் தீன் முகம்மது இஸ்மாயில் கூறும்போது, ‘‘உள்வளைந்த கணுக்கால் என்பது, குழந்தைகளுக்கு பிறவிலேயே ஏற்படும் குறைபாடாகும். குழந்தை இந்த குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதா என்பதை கருவிலேயே ஸ்கேன் செய்வதின் மூலம் கண்டுபிடித்துவிடலாம். குறைபாடு இருப்பது உறுதி செய்யப்பட்டால், குழந்தை பிறந்த அடுத்த நாளில் இருந்தே சிகிச்சையைத் தொடங்கிவிடலாம். 6 மாதத்தில் குழந்தையை பூரணமாக குணப்படுத்த முடியும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x