

தென்காசி மாவட்டத்தில் மாங்காய் விளைச்சல் அமோகமாக உள்ளது. கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு அமலில் உள்ளதால் விற்பனை பாதிக்கப்பட்டு விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
தென்காசி மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையையாட்டி உள்ள கடையநல்லூர், செங்கோட்டை, வல்லம், குற்றாலம், வடகரை உட்பட பல்வேறு பகுதிகளில் மா சாகுபடி அதிக அளவில் உள்ளது. இந்த ஆண்டில் மா விளைச்சல் அமோகமாக உள்ளது. மாங்காய்கள் அறுவடைப் பணி தொடங்கிய நிலையில் கரோனா தொற்று பரவலைத் தடுக்க நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது. இதனால், மாங்காய்களை அறுவடை செய்து, சந்தைப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் நஷ்டத்துக்கு ஆளானார்கள். மேலும், காட்டு யானைக் கூட்டமும் மா மரங்களை சேதப்படுத்தின.
விவசாயப் பணிகளுக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டதால், தற்போது மாங்காய் அறுவடைப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இருப்பினும், மாங்காய்களை சந்தைப்படுத்துவதில் தேக்க நிலை தொடர்வதால், விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இதுகுறித்து, விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் கூறும்போது, “தென்காசி மாவட்டத்தில் பல்வேறு ரக மாங்காய்கள் சாகுபடி செய்யப்படுகின்றன. இங்கு விளையும் மாங்காய்கள் வெளி மாவட்டங்களுக்கும், கேரளா உள்ளிட்ட வெளி மாநிலங்களுக்கும் விற்பனைக்குக் கொண்டு செல்லப்படும். தற்போது மாங்காய்கள் விளைச்சல் அதிகமாக உள்ள நிலையில், கரோனா தொற்று பரவலைத் தடுக்க ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு மாங்காய்களை விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை.
இதனால், மாங்காய்கள் விலை வீழ்ச்சி அடைந்துள்ளன. கடந்த ஆண்டில் 25 கிலோ மாங்காய் 500 ரூபாய் முதல் 1000 ரூபாய் வரை விற்பனையானது. தற்போது, 400 ரூபாய் முதல் 500 ரூபாய் வரைதான் விற்பனையாகிறது. போதிய விலை கிடைக்காததால் மாங்காய் சாகுபடியில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மேலும், மாங்காய்களை அறுவடை செய்து, விற்பனைக்குக் கொண்டு செல்ல முடியாததால் மாங்காய்கள் மரத்திலேயே பழுத்து அழுகும் நிலை உள்ளது. மாங்காய்களை அறுவடை செய்யவும், இடையூன்றி சந்தைப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றனர்.