

தூத்துக்குடியில் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டதால் கள்ளச்சாராயம் விற்பனை அதிகரித்து வருவதாக வந்த புகாரின் பேரில், சிப்காட் போலீஸ் உதவி ஆய்வாளர் ராஜா தலைமையிலான போலீஸார் இன்று ரோந்துப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தூத்துக்குடி துறைமுக புறவழிச்சாலையில் மீளவிட்டான் ரயில்வே மேம்பாலத்தின் கீழ் சிலர் கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது. போலீஸாரைக் கண்டதும் அதில் ஒருவர் தப்பி ஓடிவிட்டார்.
தூத்துக்குடி மூன்றாவது மைல் பசும்பொன் நகரைச் சேர்ந்த எஸ்.சரவணகுமார் (26), சு.கண்ணன் (32), பூப்பாண்டியாபுரத்தைச் சேர்ந்த மூ.அழகுமுத்து (41), ம.காளிராஜ் (28) ஆகிய 4 பேரையும் போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 5 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் தப்பியோடிய 3-வது மைல் பகுதியைச் சேர்ந்த ந.இசக்கிராஜா (42) என்பவரை போலீஸார் தேடி வருகின்றனர். இவர்கள் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் இருந்து கள்ளச்சாராயத்தைக் கொண்டுவந்து விற்பனை செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிப்காட் போலீஸார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.