

தென்காசி மாவட்டத்தில் நேற்று வரை கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 18 ஆக இருந்தது. இந்நிலையில், இன்று மேலும் 4 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த 4 பேரும் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள். இதனால், தென்காசி மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
இவர்களில் 19 பேர் புளியங்குடியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புளியங்குடி நகரம் முழுவதும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையிலும் தொடர்ந்து பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவது பொதுமக்களை அச்சமடையச் செய்துள்ளது.
இதுகுறித்து சுகாதாரத் துறை துணை இயக்குநர் டாக்டர் ராஜா கூறும்போது, “புளியங்குடியில் ஒரு முதியவருக்கு கரோனா தொற்று ஏற்பட்டதைத் தொடர்ந்து, அவருடன் தொடர்பில் இருந்த மேலும் சிலருக்கு கரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, புளியங்குடியில் பாதிக்கப்பட்டோரின் உறவினர்கள் மட்டுமின்றி, அறிகுறி இருப்பவர்களையும் கண்டறிந்து ரத்தம், சளி மாதிரி சோதனைக்கு அனுப்பும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.
கடந்த சில நாட்களில் தினமும் சராசரியாக 100 பேருக்கு கரோனா பரிசோதனை நடைபெற்றது. இதுவரை புளியங்குடியில் மட்டும் 500க்கும் மேற்பட்டோருக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. தொற்று கண்டறியப்பட்டவர்களின் குடும்பத்தினர் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர். இதனால், மற்றவர்களுக்கு பரவுவது தடுக்கப்படும். நாளை (20-ம் தேதி) முதல் ரேபிட் டெஸ்ட் கிட் மூலம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என்றார்.