

கோவை ஆர்.எஸ்.புரத்தில் மாவட்ட மைய நூலகம் உள்ளது. வாசிப்பு பிரிவு, புத்தகப் பிரிவு என தனித்தனி இடம் ஒதுக்கி, அமைதியாக அந்த நூலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. அதன் ஓரத்தில், இருட்டில் மினுமினுக்கும் மின்மினி போல, பளீச்சென இருக்கிறது மற்றுமொரு குட்டி நூலகம்.
குளிரூட்டப்பட்ட அறை, சுமார் 6 ஆயிரம் புத்தகங்கள், வாசிப்புக்கு உதவும் நவீன கருவிகள், நிரம்பிக் கிடக்கும் குழந்தைகள், கதை சொல் லல் பிரிவு என, அங்கு வருபவர்களையெல்லாம் இந்த குட்டி நூலகம் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது.
ஆம், தமிழகத்திலேயே முதல் முறையாக திறக்கப்பட்ட மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான நூலகம்தான் அது. புத்தகங்களை நேரடியாக வாசிக்க முடியாத மாற்றுத்திறனாளிகளை திறமைமிக்க வாசிப்பாளர்களாக வும், படைப்பாளர்களாகவும் உரு வாக்கிக் கொண்டிருக்கிறது இந்த நூலகம்.
பொது நூலகங்களில் பார் வைக் குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கு தனியே ‘பிரெய்லி’ புத்தகங்கள் கொண்ட பிரிவு அமைப் பது வழக்கம். ஆனால் இதர குறைபாடுள்ளவர்கள் புத்தகங் களை வாசிக்க என்ன செய்வது என்ற ஒற்றைக் கேள்வியை அடிப் படையாகக் கொண்டு இந்த நூலகம் அமைக்கப்பட்டதாக நூலகத்துறை அதிகாரிகள் கூறுகின்றனர்.
புத்தகமும், புதுமையும்
இலக்கிய, இதிகாச புத்தகங்கள் முதல் நன்னெறிக் கதைகள், அறிவி யல் நூல்கள் என அனைத்துமே பிரெய்லி முறையில் இங்கு வைக் கப்பட்டுள்ளன. இதுதவிர புகழ் பெற்ற தமிழ், ஆங்கில நாவல்கள், இலக்கணம் சார்ந்த புத்தகங்கள், குழந்தைகளுக்கான இரவு நேரக் கதைப் புத்தகங்கள், ஆயிரக்கணக்கில் ஒலி வடிவ புத்தகங்கள் என ஒரு புத்தக உலகமே இங்கு குவிந்து கிடக்கிறது.
வெறுமனே புத்தகங்கள் இருந் தால் மட்டும் போதுமா என்றால், முற்றிலும் கணினிமயமாக்கப்பட்டு பல லட்சம் மதிப்பில் நவீன கருவிகள் மூலம் இங்கு புத்தக வாசிப்பு ஊக்குவிக்கப்படுகிறது.
பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கு லோவிஷன் கீபோர்டு கணினிகள், ஆட்டிசம் பாதித்தவர்களுக்கு பெரிய கீபோர்டு கணினிகள், விரல் இல்லாதவர்கள் பிரத்யேக மவுஸ், மனவளர்ச்சி குன்றிய குழந்தை களுக்கு நினைவாற்றலை மேம்படுத்தும் மைண்ட் ரீடிங் அட்டைகள், புத்தகத்தை வைத்தால் போதும், 63 மொழிகளில் படித்துச் சொல் கிறது ஒரு கருவி. திரையில் இருப்பதை பிரெய்லி எழுத்தாக மாற்றி விரல்நுனியில் கொடுக் கிறது மற்றொரு கருவி. இப்படி மாற்றுத்திறனாளி குழந்தைகளுக் கான தனித்துவம் கொண்ட நூலக மாக இது செயல்பட்டு வருகிறது.
மாற்றத்தைக் காண்கிறோம்
மாவட்ட நூலக அலுவலர் (பொறுப்பு) ஜெ.கார்த்திகேயன் கூறியதாவது: மாற்றுத்திறன் கொண்ட குழந்தைகளுக்கு அவர் கள் புரிந்து கொள்ளக்கூடிய வகை யில் வசதிகள் இருக்கவேண்டும். வெளிப்புற நடைபாதை முதற் கொண்டு இடங்களை வித்தியாசப் படுத்தும் தரைத்தளங்கள் உள்ளன.
எது வாசிப்பு பகுதி, எது அமர்ந்து படிக்கும் பகுதி, எது நடந்து செல்லும் பகுதி என்பதை தொடு உணர்விலேயே அவர்களால் உணர முடியும். இதுபோன்ற வசதிகள் எங்கும் கிடைப்பதில்லை. புத்தகங் களைத் தாண்டி, நன்னெறிக் கதைகள் குழந்தைகளை நல்வழிப்படுத் தும் என்பதால், கதை சொல்லலுக்கு தனிக்கவனம் கொடுக்கப்படுகிறது.
புத்தகத்தை ஒலி வடிவமாகக் கேட்கும் மாணவர்.
ரூ.50 லட்சம் செலவில் இந்தி யாவிலேயே முதல்முறையாக, முன்மாதிரியாக இந்த நூலகம் அமைக்கப்பட்டது. எந்தவிதமான மாற்றுத்திறனாளி குழந்தைகளாக இருந்தாலும் சரி, அவர்களும் புத்தகத்தை வாசித்து அறிவைப் பெருக்க முடியும் என்பதற்கு இந்த நூலகம் ஒரு சாட்சி. நாளடைவில் அவர்களது குறைபாடுகளைக்கூட வாசிப்பு குறைத்து விடுகிறது. இதைக் கண்ணெதிரே நாங்கள் பார்த்து வருகிறோம். இங்கு வாசகர் களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதே இத்திட்டத்தின் வெற்றி.
திருச்சியிலும் இதே போன்ற நூலகத்தை அமைக்கும் பணி நடைபெறுகிறது என்றார்.
காக்னிசன்ட் குழு
இங்கு நூலகத்துறை ஊழியர்களுடன் இணைந்து காக்னிசன்ட் நிறுவன ஊழியர்கள் குழு ஒன்று, தன்னார்வ அடிப்படையில் செயல்பட்டு வருகிறது.
புத்தகங்களை ஒலி வடிவமாக மாற்றிக் கொடுப்பது, மாற்றுத்திறன் குழந்தைகளை கவனித்து அவர்களுக்கேற்ப புத்தகங்களை வாசித்துக் காட்டுவது, கணினிப் பயிற்சி வழங்குவது என பல்வேறு பணிகளை இந்த குழு மேற் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.