

செங்கல்பட்டு அருகே பிடிபட்ட டெல்லி இளைஞருக்கு கரோனா தொற்று இல்லை என, சுகாதாரத்துறையினர் தெரிவித்துள்ளனர்.
டெல்லியை சேர்ந்த 30 வயது இளைஞர் ஒருவர், கடந்த 6-ம் தேதி விழுப்புரம் அரசு மருத்துவமனையில் உள்ள கரோனா சிறப்புப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு கரோனா பரிசோதனை முடிந்து, 'கரோனா தொற்று இல்லை' என கடந்த 7-ம் தேதி இரவு அவரை சுகாதாரத்துறையினர் அனுப்பி வைத்தனர். பின்னர் நள்ளிரவில் வந்த சோதனை அறிக்கையில் அந்த இளைஞருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகத் தெரியவந்தது.
இதையடுத்து, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குநர் செந்தில்குமார் விழுப்புரம் மேற்கு போலீஸாரிடம் புகார் அளித்தார். அந்த இளைஞரைப் பிடிக்க 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து, காவல்துறையினர் உளுந்தூர்பேட்டை முதல் சென்னை வரை புறவழிச்சாலையில் தமிழ், ஆங்கிலம் இந்தி ஆகிய மொழிகளில் தகவல் தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்ணுடன் சுவரொட்டி ஒட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த 14-ம் தேதி வடமாநில லாரி ஓட்டுநர் ஒருவர் போலீஸாரைத் தொடர்பு கொண்டு டெல்லி இளைஞர் செங்கல்பட்டு அருகே படாளம் என்ற இடத்தில் உள்ள லாரி நிறுத்துமிடத்தில் தங்கி இருப்பதாகத் தகவல் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து தனிப்படை போலீஸார் விரைந்து சென்று டெல்லி இளைஞரைப் பிடித்து சுகாதாரத்துறையிடம் ஒப்படைத்தனர்.
பின்னர் அவருக்கு மேற்கொண்ட சோதனையில் அவருக்கு கரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டு கண்காணிப்பு வார்டுக்கு மாற்றப்பட்டுள்ளார். அங்கு அவர் 14 நாட்கள் கண்காணிக்கப்படுவார் என்று சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.