

சென்னை, கிண்டியில் வெளிமாநிலத்தவர்கள் தங்கியுள்ள முகாமில் சிறுமி ஒருவருக்கு சென்னை மாநகராட்சி பிறந்த நாள் கொண்டாடியது சமூக வலைதளங்களில் வரவேற்பையும் பாராட்டையும் பெற்றுள்ளது.
தமிழகத்தில் இதுவரை 1,372 பேர் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று மட்டும் 49 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நாளிலிருந்து சென்னையில் ஆதரவற்றவர்கள், தெருக்களில் வசிப்பவர்கள், ஆதரவற்ற முதியவர்கள், தங்கள் ஊர்களுக்குச் செல்ல முடியாமல் இங்குள்ள வெளிமாநிலத்தவர்கள் ஆகியோர் சமூக நலக்கூடங்கள், காப்பகங்கள், திருமண மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு மூன்று வேளையும் உணவு வழங்கப்பட்டு வருவதாக, சென்னை மாநகராட்சி ஏற்கெனவே தெரிவித்திருந்தது.
இந்நிலையில், சென்னை, கிண்டியில் வெளிமாநிலத்தவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள முகாம் ஒன்றில், ஸ்ருஷ்டி குமாரி என்ற சிறுமி ஒருவருக்கு சென்னை மாநகராட்சிப் பணியாளர்கள் கேக் வெட்டச் செய்து அச்சிறுமியின் பிறந்த நாளைக் கொண்டாடினர். தன் பிறந்த நாளுக்கு கேக் வாங்கி வந்து கொண்டாட செய்தது அச்சிறுமியை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இது தொடர்பாக, சென்னை மாநகராட்சி இன்று (ஏப்.19) தன் ட்விட்டர் பக்கத்தில், "கிண்டியில் வெளிமாநிலத்தவர்கள் தங்கியுள்ள முகாமில் சிறுமி ஒருவரின் பிறந்த நாளை நாங்கள் கொண்டாடினோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் தங்கள் அன்பானவர்களுடன் வீட்டில் இருக்க முடியாத தருணத்தில், இத்தகைய நிகழ்வுகள் அவர்களின் நம்பிக்கையையும் உளநலத்தையும் பெருக்கும். அவர்களை கவனித்துக்கொள்வோம்" எனப் பதிவிட்டுள்ளது.
இப்பதிவுக்கும் சென்னை மாநகராட்சியின் செயலுக்கும் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.