Published : 19 Apr 2020 03:55 PM
Last Updated : 19 Apr 2020 03:55 PM

திறமையான இளம் மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது; நீலகிரி மருத்துவரின் இறப்புக்கு அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல்

நீலகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்த மருத்துவருக்கு, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சிறுமுகை ரேயான் நகரைச் சேர்ந்தவர் வாசுதேவன். இவரது மகன் வி.ஜெயமோகன் (30). இவர் சென்னை மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் படித்தார். இதையடுத்து, கடந்த 3 ஆண்டுகளாக, நீலகிரி மாவட்டத்தில் மலைப் பகுதியில் இருக்கும் தெங்குமரஹடா எனும் குக்கிராமத்தில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணியாற்றி வந்தார்.

ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில் அக்கிராமத்தில் உள்ள மக்களுக்கு நேரடியாக வீடுகளுக்கே சென்று ஜெயமோகன் மருத்துவ உதவிகளைச் செய்து வந்துள்ளார். இந்நிலையில், டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட ஜெயமோகன், கோவை பி.எஸ்.ஜி. மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி சமீபத்தில் உயிரிழந்தார்.

இவரது மரணம், தெங்குமரஹடா மட்டுமின்றி தமிழகம் முழுவதும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மருத்துவர் ஜெயமோகனின் மறைவுக்கு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக, அவர் இன்று (ஏப்.19) தன் ட்விட்டர் பக்கத்தில், "நீலகிரி மாவட்டத்தில் பழங்குடிகளின் கிராமத்தில் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய மருத்துவர் ஜெயமோகனின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். திறமையான, இளம் மருத்துவரை தமிழகம் இழந்துவிட்டது. இந்நேரத்தில் துயரமடைந்துள்ள அவரது குடும்பத்தினரின் அமைதிக்காகப் பிரார்த்திக்கிறேன்" எனப் பதிவிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x