Published : 19 Apr 2020 03:26 PM
Last Updated : 19 Apr 2020 03:26 PM

புற்றுநோய், டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்குக; தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் புற்றுநோய் உள்ளிட்ட டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக, கே.எஸ்.அழகிரி இன்று (ஏப்.19) வெளியிட்ட அறிக்கையில், "கரோனா தடுப்பு நடவடிக்கைகளால் புற்றுநோய் மருத்துவ சிகிச்சை பாதிக்கப்படாமல் உரிய வசதிகளை செய்து தர வேண்டும் என புற்றுநோய் மருத்துவ நிபுணர் சாந்தா சில நாட்களுக்கு முன்பு வலியுறுத்தியதாக செய்தி வெளிவந்தது.

இது குறித்து தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. கரோனாவுக்கு எப்படி முன்கூட்டியே சிகிச்சை அளிக்க வேண்டுமோ, அதுபோல புற்றுநோயாளிகளுக்கும் முன்கூட்டியே சிகிச்சை அளிக்க வேண்டும். அப்போதுதான் அவர்களை காப்பாற்ற முடியும்.

டயாலிசிஸ், கீமோதெரபிக்கு 102 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்திக்கொள்ளலாம் என சமீபத்தில் சுகாதாரத்துறை அதிகாரிகள் அறிவிப்பு வெளியிட்டிருந்தனர். ஆனால் நடைமுறையில் 102 ஆம்புலன்ஸ் பயன்படுத்துகிற வாய்ப்பை நோயாளிகளால் பெற முடியவில்லை.

மக்கள் ஊரடங்கு நடைமுறையில் இருக்கும்போது டயாலிசிஸ் செய்துகொள்ள போக்குவரத்து வசதி இல்லாமல் பல நோயாளிகள் கடும் துன்பத்தை அனுபவித்து வருகின்றனர். ஏற்கெனவே போக்குவரத்துக்கு மிகவும் உதவிகரமாக இருந்த ஓலா, ஊபர் போன்ற வாடகை வாகனங்களின் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுவிட்டது. எந்த வித வாகன வசதியும் இல்லாமல் நோயாளிகள் டயாலிசிஸ் செய்ய முடியாமல் உயிருக்கு போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், கர்நாடக, ஆந்திர அரசுகள் ஓலா என்கிற வாடகை வாகன சேவை வழங்கும் தனியார் நிறுவனத்தோடு இத்தகைய அவசர சிகிச்சை பெறுபவர்களுக்கு போக்குவரத்து சேவை செய்துகொடுப்பதற்கு ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளது. அந்த சேவையை அந்த மாநில மக்கள் சிறப்பாக பயன்படுத்தி வருகின்றனர்.

அதேபோல தமிழகத்திலும் புற்றுநோய் உள்ளிட்ட டயாலிசிஸ் சிகிச்சை பெற வேண்டிய நோயாளிகளுக்கு போக்குவரத்து வசதிகளை உருவாக்க வேண்டும். இதற்கு ஓலா, ஊபர் போன்ற தனியார் வாடகை வாகன வசதிகளை பயன்படுத்துவதற்கு உரிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

இந்த கோரிக்கையிலுள்ள தீவிரத்தன்மையை மனிதாபிமான உணர்வோடு புரிந்துகொண்டு தமிழக அரசு உடனடியாக நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x