பழங்கால முறையில் வீடு தேடிச் செல்லும் சவரத் தொழிலாளர்கள்: முறைப்படுத்தி முடி திருத்த அனுமதிக்க கோரிக்கை

பிரதிநிதித்துவப் படம்
பிரதிநிதித்துவப் படம்
Updated on
1 min read

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் இருந்து, முடி திருத்தும் தொழிலுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என, முடி திருத்துவோர் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஊரடங்கு காரணமாக கடந்த 27 நாட்களாக வருமானமின்றி வாடும் முடி திருத்தும் தொழிலாளர்கள், சிலர் வாடிக்கையாளரின் வீடுகளுக்கே சென்று முடி திருத்தும் தொழிலை மேற்கொண்டு வருகின்றனர்.

பண்ருட்டியைச் சேர்ந்த சங்கர் என்பவர் கூறுகையில், "நான் ஒரு கடையில் பணிபுரிகிறேன். கடை மூடப்பட்டதால், வருமானம் இல்லாத நிலையில் என்னுடன் தொடர்பிலிருக்கும் வாடிக்கையாளரின் அழைப்பை ஏற்று அவரது வீட்டுக்கே சென்று, முகக்கவசம் மற்றும் கையுறைகளை அணிந்து, முடி திருத்துதல் மற்றும் சவரம் செய்து வருவதால், அன்றாட வருமானம் ஓரளவுக்கு கிட்டுகிறது" என்றார்.

இதேபோன்று வடலூரில் முடி திருத்தும் கடை உரிமையாளர் ஊரடங்கு காலத்தில் கடையைத் திறந்ததால், அவரது கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இந்த நிலையில், ஏப்ரல் 20 முதல் ஊரடங்கைத் தளர்த்தி முடி திருத்தும் கடைகளுக்கும் அனுமதி வழங்கப்படும் என எதிர்பார்ப்பதாக கூறுகிறார் செந்தில் என்ற சவரத் தொழிலாளி.

கிராமப்புறங்களில் வீடுகளுக்குச் சென்று சவரம் செய்வது ஒருபுறம் இருந்தாலும், மற்றொரு புறத்தில் கரோனா வைரஸ் அச்சம் நீங்கும் வகையில், உள்ளூர் பிரமுகர்களுக்கு மட்டுமே சவரம் செய்வது எனவும், வெளியூர் நபர்களுக்கு சவரம் செய்வதில்லை என்ற முடிவை எடுத்திருப்பதாக கருங்குழியைச் சேர்ந்த ஆறுமுகம் என்பவர் தெரிவித்தார்.

இது தொடர்பாக கடலூர் மாவட்ட முடிதிருத்தம் தொழிலாளர் நலச் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ஜோதி கூறுகையில், "அரசின் உத்தரவு சரியானதுதான். மற்ற தொழில்களைக் காட்டிலும் வாடிக்கையாளரிடம் நெருங்கி தொழில் செய்பவர்கள் நாங்கள் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

எங்களில் சிலர் அன்றாட வருமானத்திற்காக வீடு தேடிச் சென்று முடி திருத்துகின்றனர். இது தேவையல்ல என்று கூறிப்பார்த்தேன். ஏனெனில் அவ்வாறு செல்லும்போது, யாரேனும் ஒருவருக்கு நோய் இருந்தாலும், இரு தரப்பையும் பாதிக்கும் என்பதால் தடுத்தேன்.

ஆனால், அவர்களின் வருமானத்தையும் கருத்தில் கொள்ள வேண்டியிருந்தது. அரசு ஊரடங்கு தளர்த்தும் நேரத்தில் எங்கள் தொழிலைக் கருத்தில் கொண்டும், பொதுமக்களின் தேவையை புரிந்தும், சில கட்டுப்பாடுகளுடன் முடி திருத்தும் தொழிலை மேற்கொள்ள அனுமதிக்க வேண்டும்.

மேலும், எங்களில் கிராமப்புறத்தில் உள்ளவர்கள் போதிய விழிப்புணர்வு இல்லாததால் அமைப்பு சாரா தொழிலாளர் நல வாரியத்தில் சிலர் உறுப்பினராக இல்லாததால், அவர்களையும் தற்போது கணக்கில் கொண்டு நிவாரண உதவிகளை வழங்க வேண்டும் என மாவட்ட ஆட்சியரிடத்தில் கோரிக்கை வைத்துள்ளோம்" என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in