

விருதுநகர் மாவட்டத்தில் கல்லூரி மாணவி உள்பட மேலும் 2 பேருக்கு கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
விருதுநகர் மாவட்டத்தில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், விருதுநகர், திருச்சுழி உள்ளிட்ட பகுதிகளில் கரோனா வைரஸ் தொற்றால் 17 பேர் பாதிக்கப்பட்டு மதுரை அரசு மருத்துவமையில் சிகிச்சை பெற்று வந்தனர். அவர்களில் 8 பேர் குணமடைந்து வீடு திரும்பினர்.
இந்நிலையில், விருதுநகர் மாவட்டம் கன்னிசேரிபுதூர் அருகே உள்ள டி.சேடப்பட்டியைச் சேர்ந்த 38 வயதுடைய ஆண் ஒருவருக்கும், குமாரபுரத்தைச் சேர்ந்த 20 வயது கல்லூரி மாணவி ஒருவருக்கும் கரோனா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது.
அவர்கள் இருவரையும் சுகாதாரத்துறையினர் மீட்டு மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இதனால் விருதுநகர் மாவட்டத்தில் கரோனா வைரஸ் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது.
தற்போது புதிதாக கரோனா தொற்று ஏற்பட்டது குறித்து சுகாராத்துறையினர் ஆய்வு மேற்கொண்டபோது டி.சேடப்பட்டியைச் சேர்ந்தவர் அண்மையில் வெளிநாடு சென்று வந்தது தெரியவந்தது. ஆனால், கல்லூரி மாணவிக்கு எவ்வாறு தொற்று ஏற்பட்டது என்பது குறித்தும், அவர் பல இடங்களுக்குச் சென்று வந்ததால் அப்பகுதியைச் சேர்ந்த 100க்கும் மேற்பட்டோரின் பட்டியலை தயாரித்து வருவதாகவும் சுகாதாரத்துறை அலுவலர்கள் தெரிவித்தனர்.