Published : 03 Aug 2015 04:25 PM
Last Updated : 03 Aug 2015 04:25 PM

மதுவிலக்கு போராட்டம் நடத்துபவர்கள் மீது நடவடிக்கை: தமிழக அரசு மீது கருணாநிதி தாக்கு

மதுவிலக்கு போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் துணையோடு கடுமையான நடவடிக்கைகளில் அரசு ஈடுபட்டிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''மதுவிலக்குக் கொள்கையை உடனடியாக நடைமுறைப்படுத்திட வேண்டுமென்ற கோரிக்கை தமிழகம் முழுதும் எழுப்பப்பட்டு, அதன் காரணமாக நடந்து வரும் போராட்டங்களையெல்லாம் நான் பட்டியலிட்டுக் காட்டினேன்.

அத்துடன், தமிழக அரசு மதுவிலக்கினை நடைமுறைப்படுத்திட வேண்டுமென்று நான் நேற்றே வலியுறுத்தினேன். நான் மட்டுமல்ல; தமிழகத்திலே உள்ள அனைத்துக் கட்சித் தலைவர்களும் இது குறித்த வேண்டுகோளினை விடுத்திருந்தார்கள்.

டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்ற கோரிக்கைக்காகவே காந்தியவாதி சசிபெருமாள் தனது உயிரையே கொடுத்திருக்கிறார். அவருடைய குடும்பத்தினரே, தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தும் வரை, அவரது உடலை வாங்க மாட்டோம் என்று கூறிவருகிறார்கள்.

குறிப்பாக சசிபெருமாளின் மகன் விவேக், மகள் கவியரசி உட்பட 28 பேர் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். காவல் துறையினரோ அவர்களோடு இணக்கமாகப் பேசிச் சமாதானம் செய்ய முயற்சிக்காமல், அந்த 28 பேரையும் கைது செய்து நிலைமையை மோசமாக்கி இருக்கிறார்கள். சசிபெருமாளின் மகள் கவியரசி பள்ளி செல்லும் சிறுமி. அந்தச் சிறுமியை கூட இரக்கமின்றிக் கைது செய்கின்ற அளவுக்கு அதிமுகஅரசு சென்றுள்ளது.

இதுபற்றி இன்றைய இந்து ஆங்கில நாளிதழ், சசிபெருமாளின் பள்ளி செல்லும் மகள் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட நடவடிக்கை இளையோருக்கு நீதி வழங்கும் சட்டத்தின்படி முறைகேடானது; சிறுவர் சிறுமிகளை சீருடை அணிந்த காவல் துறையினர் கைது செய்யக் கூடாது என்றெல்லாம் விரிவாகச் சுட்டிக் காட்டியுள்ளது.

இதனைத் தொடர்ந்து சசிபெருமாளின் மனைவி மகிழம், மகன் நவநீதன் ஆகியோரும் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினரும் உண்ணாவிரதம் இருந்திருக்கிறார்கள். அவர்களையும் அதிமுக ஆட்சியினர் கண்மூடித் தனமாகக் கைது செய்திருக்கிறார்கள்.

கைது செய்யப்பட்ட சசிபெருமாளின் மகனே கழகப் பொருளாளர், ஸ்டாலினை தொலைபேசியிலே தொடர்பு கொண்டு நடந்த சம்பவங்களை விவரித்திருக்கிறார். வாலிபர் மற்றும் மாணவர் சங்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சசிபெருமாள் குடும்பத்தினரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையுடன் ஊர்வலமாகச் சென்று ஆர்ப்பாட்டம் செய்திருக்கிறார்கள். அவர்களுக்கும் காவல் துறையினருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு அந்த இளைஞர்களையும் காவல் துறையினர் கடுமையாகத் தாக்கியிருக்கிறார்கள்.

இதுபோலவே நெல்லை மாவட்டம், கலிங்கப்பட்டியில் டாஸ்மாக் கடையை மூடச் சொல்லி மதிமுக சார்பில் அந்தக் கட்சியின் தலைவர் வைகோ தலைமையில் நடத்தப்பட்ட போராட்டத்தில் காவல் துறையினர் தடியடி நடத்திக் காயப்படுத்தியதோடு, பத்து ரவுண்டுகள் கண்ணீர்ப் புகை குண்டு வீச்சும் நடத்தியுள்ளனர்.

போராட்டம் நடத்தியவர்கள் மீது கொலை முயற்சி வழக்கு என்றெல்லாம் பதிவு செய்திருக்கிறார்கள். அந்த ஊரில் உள்ள டாஸ்மாக் கடையை மூட வேண்டுமென்று, ஊராட்சி மன்றத்திலே தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பிறகும் கூட, இந்த ஆட்சியினர் அந்தக் கடையை மூடுவதற்கு முன் வரவில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்கள்.

கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டாறு அருகிலு ஆற்றூர் பேரூராட்சியிலும் டாஸ்மாக் மதுக் கடைகளை அகற்றக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல் துறையினர் தடியடி நடத்திக் கலைத்திருக்கிறார்கள். காஞ்சிபுரத்திலும், ஆற்காட்டிலும் மதுவிலக்கை அமல்படுத்த வேண்டுமென்று கோரிப் போராட்டம் நடத்தியிருக்கிறார்கள்.

டாஸ்மாக் கடை ஊழியர்கள் மாநில சம்மேளனத்தின் பொதுச் செயலாளர், திருச்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில் "தமிழக ஆட்சியாளர்களின் பிடிவாதப் போக்கினால் கடைகளில் பணியாற்றும் அப்பாவி ஊழியர்கள் பாதிக்கப்படுவதை டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்காது. தமிழக அரசு டாஸ்மாக் மதுக்கடைகள் குறித்த பிரச்சினையில் இனியும் காலம் தாழ்த்தாமல் தனது நிலைப்பாட்டைத் தெரிவிக்க வேண்டும். கடை ஊழியர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிய பாதுகாப்பை உறுதி செய்திட வேண்டும்" என்றெல்லாம் தெரிவித்திருக்கிறார்.

இவ்வாறு தமிழகமெங்கும் மதுவிலக்கை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டுமென்ற கோரிக்கையை வலியுறுத்திப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. ஆனால் இது பற்றி அரசின் சார்பில் ஏதாவது நடவடிக்கை எடுக்கப் படுகிறதா என்றால் இல்லை என்பது தான் வேதனை.

போராட்டம் நடைபெறும் எந்த இடத்திலாவது அமைச்சர்களில் யாராவது ஒருவர் சென்று அமைதி ஏற்படுத்த முயன்றிருக்கிறாரா என்றால் அதுவும் கிடையாது. உண்மையில் சொல்லப் போனால், தமிழகத்திலே ஆட்சி என்று ஒன்று நடைபெறுகிறதா என்பதே கேள்விக்குள்ளாகிவிட்டது.

எனவே, தமிழகத்திலே பூரண மதுவிலக்கை நடைமுறைப் படுத்த வேண்டுமென்ற கோரிக்கைக்காக நடைபெறும் போராட்டத்தை, சமூகப் பிரச்சினையாகக் கருதி அரசே நேரடியாக உரிய நடவடிக்கை மேற்கொண்டு அரசியல் தீர்வு காண முயற்சிக்காமல், போராட்டம் நடத்துபவர்கள் மீது காவல் துறையின் துணையோடு கடுமையான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பதை வன்மையாகக் கண்டிப்பதோடு, இந்தப் போராட்டங்களில் கைது செய்யப்பட்டவர்களை யெல்லாம் நிபந்தனையின்றி உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்'' என்று கருணாநிதி கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x