Published : 19 Apr 2020 12:03 PM
Last Updated : 19 Apr 2020 12:03 PM

தமிழக ஆரம்ப சுகாதார நிலையங்கள் என்ன செய்கின்றன? - விரிவான ரிப்போர்ட்!

தஞ்சை, பேராவூரணியில் வீடுகளுக்கே சென்று மருத்துவ உதவிகளைச் செய்துவரும் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர்.

இந்தியா முழுவதும் கரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள், செவிலியர்களைத் தவிர கிராமங்களில் குறிப்பாக, மலைக் கிராமங்களில் தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடும் பல பணியாளர்கள் நம் கவனத்திற்கு வராமலேயே இருக்கின்றனர்.

அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களின் மருத்துவர்கள், செவிலியர்கள், கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், ஆஷா பணியாளர்கள் (ASHA-Accredited Social Health Activist) எனப்படும் சமூக சுகாதார ஆர்வலர்கள்தான் அவர்கள். இவர்களுள் பலருக்கு அடிப்படைப் பாதுகாப்பான முகக்கவசம் கூட வழங்காவிட்டாலும், அவர்கள் தங்களின் பணிகளைத் தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றனர்.

ஒரு மாநிலத்திற்கு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்களின் பணிகள் மிகவும் முக்கியமானவை.

500 பேர் கொண்ட மக்கள்தொகைக்கு அங்குள்ள குழந்தைகளுக்கு சத்தான உணவுகளை வழங்கும் அங்கன்வாடி மையங்கள் இருக்க வேண்டும். ஒவ்வொரு 1,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும் ஒரு ஆஷா பணியாளர் எனப்படும் சமூக சுகாதார ஆர்வலர் இருக்க வேண்டும். ஒவ்வொரு 5,000 பேர் கொண்ட மக்கள்தொகைக்கும் துணை சுகாதார நிலையங்களில் தகுதி வாய்ந்த செவிலியர் இருக்க வேண்டும். 35 ஆயிரம் முதல் 50 ஆயிரம் பேர் கொண்ட மக்கள்தொகைக்கு மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களுடன் கூடிய ஆரம்ப சுகாதார நிலையங்களும், அதற்கடுத்த நிலைகளில், வட்டார மற்றும் மாவட்ட அளவிலான அரசு மருத்துவமனைகள், அரசு தலைமை மருத்துவமனைகள் இருக்க வேண்டும். இதுதான் ஒரு மாநிலத்தின் பொது சுகாதாரக் கட்டமைப்பின் வலுவான படிநிலைகளாகும்.

கர்ப்பிணிப் பெண்களுக்கு முதன்மை சுகாதார உதவிகளைச் செய்வதிலும், குழந்தைகளுக்கு சத்து மாத்திரைகள் வழங்குதல், இளம்பெண்களுக்கு சானிட்டரி நாப்கின்கள், மாதவிடாய் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல், பிறப்பு, இறப்பு குறித்து பதிவு செய்தலிலும் ஆஷா பணியாளர்கள் முக்கியப் பங்காற்றுகின்றனர்.

கர்ப்பமாக உள்ள பெண்களைப் பதிவு செய்தல், 19 வயது வரை உள்ள வளரிளம் பெண்களின் வளர்ச்சியைக் கண்காணித்தல் ஆகிய பணிகளை துணை சுகாதார நிலையங்களில் பணிபுரியும் கிராம சுகாதார செவிலியர்கள் மேற்கொள்கின்றனர்.

தாய்-சேய் நல அட்டைகள் வழங்குதல், பிரசவம், குடும்ப கட்டுப்பாடு அறுவை சிகிச்சை ஆகிய பணிகளை மேற்கொள்வதில் ஆரம்ப சுகாதார நிலையங்கள் முக்கியப் பங்காற்றுகின்றன.

பெண்கள் குறிப்பாக, கர்ப்பிணிப் பெண்கள், வளரிளம் பெண்கள், குழந்தைகளுக்கு அரசின் பல திட்டங்களைக் கொண்டு சென்று சேர்ப்பதில் மேற்கூறிய அனைவரும் மிக முக்கியப் பங்காற்றுகின்றனர்.

2015-ம் ஆண்டு தரவுகளின்படி, தமிழகத்தில் 1,750 ஆரம்ப சுகாதார நிலையங்கள் உள்ளன.

மிகச்சிறந்த கட்டமைப்புக்கொண்ட தமிழகத்தின் ஆரம்ப சுகாதார நிலையங்களில், கடந்த சில ஆண்டுகளாக சில கிராமங்களில் ஆஷா பணியாளர்கள் இல்லாத நிலையும், துணை சுகாதார நிலையங்களில் செவிலியர்கள் இல்லாத நிலையும் உள்ளது.

ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கும் இந்நேரத்தில் ஆரம்ப சுகாதர நிலையங்களை நம்பியே நம் கிராமங்களின் ஆரோக்கியம் இருக்கிறது. கிராமங்களில் பல பணிகளை மேற்கொள்ளும் இத்தகைய பணியாளர்கள் சிலர் எப்படி தொற்று தடுப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர் என்பது குறித்துப் பேசினோம்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள கலசப்பாக்கம் வட்டாரத்தில் உள்ள மட்டவெட்டு எனும் ஊராட்சியில் அங்கன்வாடி பணியாளராக உள்ள மகேஸ்வரி, ஊரடங்கு காலத்தில் மக்களுக்கு நேரடியாகச் சென்று தான் மேற்கொள்ளும் பணிகள் குறித்துப் பகிர்ந்துகொண்டார்.

"மட்டவெட்டு கிராமத்தில் உள்ள மக்களுக்கு போன் மூலம் உடல்நிலை குறித்து விசாரிப்போம். தேவைப்பட்டால் நேரில் சென்று விசாரிக்க வேண்டும். அங்கன்வாடி குழந்தைகளுக்குத் தேவையான அரிசி, பருப்பு, முட்டை ஆகியவற்றை வீடு, வீடாகக் கொண்டு சென்று சேர்க்க வேண்டும். எங்கள் பகுதியில் 28 பயனாளிகள் இதன் கீழ் உள்ளனர். முட்டைகளை வாரத்திற்கு ஒருமுறையும், மற்ற உணவுப்பொருட்களை 15 நாட்களுக்கு ஒருமுறையும் நேரில் சென்று வழங்குகிறோம்.

இந்த ஊரடங்கு சமயத்தில் நாங்கள் நேரடியாகக் கொடுக்கவில்லையென்றால் மக்கள் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். இதுதவிர, வீடுதோறும் சென்று, சளி, காய்ச்சல் இருக்கிறதா என கணக்கெடுக்கும் பணியிலும் நாங்கள் ஈடுபடுத்தப்படுகிறோம். இதுதவிர, குழந்தைகளுக்குப் பூச்சி மருந்து, இரும்புச்சத்து மாத்திரைகளைக் கொடுக்க வேண்டும்" என்றார்.

ஆனால், தங்களுக்கு முகக்கவசம் கூட தரவில்லையென்றும், கைக்குட்டையைத்தான் பயன்படுத்துவதாகவும் கூறுகிறார் மகேஸ்வரி.

அங்கன்வாடி ஊழியர்: பிரதிநிதித்துவப் படம்

"வீடு, வீடாகச் சென்று கணக்கெடுக்க வேண்டும். யாருக்கு என்ன உடல் பிரச்சினை இருக்கும் என்று தெரியாது. ஆனால், எங்களுக்கு முகக்கவசம் கூட தரவில்லை. நாங்கள் பாதுகாப்புடன் இருந்தால் தான் மற்றவர்களைப் பாதுகாக்க முடியும். இதனால் பயந்துகொண்டு, வீடுகளுக்குச் செல்லும்போது, ஒருவரை மட்டும் வெளியே அழைத்து வீட்டில் உள்ளவர்களின் நிலையை விசாரிக்கிறோம்.

நாங்கள் களத்திற்குச் செல்லும்போது கைக்குட்டையைத்தான் கட்டிக்கொண்டு செல்ல வேண்டும். இங்கு கடை ஏதும் இல்லாததால் முகக்கவசம் வாங்கவில்லை. எங்களுக்குப் பயமாகத்தான் இருக்கிறது. அங்கன்வாடி ஊழியர்கள் பலரும் இப்படித்தான் பணிபுரிகின்றனர்" என்றார், மகேஸ்வரி.

அதே மட்டவெட்டு கிராமத்தில், 28 ஆண்டுகளாக கிராம சுகாதார செவிலியராகப் பணிபுரியும் லில்லிமேரி, கர்ப்பிணிப் பெண்களுக்கு ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் குறித்தும், அவர்களுக்கு கிராம சுகாதார செவிலியர்கள் வீடுகளுக்கே சென்று மேற்கொள்ளும் பணிகள் குறித்தும் விளக்கினார்.

"31 ஆண்டுகளாக இப்பணியில் இருக்கிறேன். இன்னும் 2-3 ஆண்டுகளில் ஓய்வு பெறப் போகிறேன். இங்குள்ள மக்கள் பொருளாதார வசதி குறைந்தவர்கள். திருப்பூர் போன்ற மாவட்டங்களில் அவர்கள் வேலை செய்கிறார்கள். எதுவாக இருந்தாலும் நம்மிடம்தான் கேட்பார்கள்.

கர்ப்பிணிப் பெண்கள் எந்த சந்தேகமாக இருந்தாலும் போன் செய்து எங்களிடம் கேட்பார்கள். அவர்கள் இந்த 2 மாதங்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்ல முடியாது. அதனால் அவர்களை நேரடியாக வீடுகளுக்கே சென்று பரிசோதித்து வருகிறோம். ஒரு நாளைக்கு 50 வீடுகள் செல்கிறோம். மஸ்தூர் எனப்படும் சுகாதாரப் பணியாளர்களும் இப்பணிகளில் ஈடுபடுகின்றனர்.

அங்குள்ள மக்கள் என்னை 'அக்கா' என்றுதான் அழைப்பார்கள். அவ்வளவு நெருக்கமாக கிராம மக்களுடன் நாங்கள் இருக்கிறோம்.

கிராம சுகாதார செவிலியர்: பிரதிநிதித்துவப் படம்

காலையில் 8- 8.30 மணிக்கு களப்பணியை ஆரம்பிப்போம். வீடு, வீடாகச் சென்று கர்ப்பமாக உள்ள பெண்களுக்கு பரிசோதனை செய்வோம். அவர்களின் ரத்த அழுத்தம், உயரம், எடை, குழந்தையின் அசைவு, புதிதாக கர்ப்பமாக உள்ள பெண்களைப் பதிவு செய்தல் உள்ளிட்ட வேலைகளைச் செய்வோம். அவர்கள் எப்படி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற அறிவுரைகள் வழங்குவோம். ஒரு மாதத்திற்குத் தேவையான இரும்பு, கால்சியம் மாத்திரைகளை வழங்குவோம். மாலை 5 மணிக்குத்தான் இந்த வேலைகள் முடியும்.

இது மிகவும் குக்கிராமம். சாதாரண நாட்களிலேயே இந்த ஊருக்கு 4 முறைதான் பேருந்து வரும். மற்ற நேரங்களில் இருசக்கர வாகனங்களில்தான் செல்ல வேண்டும். மிக தொலைவில் உள்ள மற்ற கிராமங்களுக்குச் செல்லும்போது கொஞ்சம் சிரமமாக இருக்கும்" என்றார் லில்லிமேரி.

இதுதவிர, ஓர் ஊரில் கரோனா தாக்கத்தால் கட்டுப்படுத்தப்பட்ட மண்டலங்களில் (Containment places) உள்ளவர்களைக் கண்காணிக்கும் பணிகளையும், அங்கு தனிமைப்படுத்தப்பட்டவர்களைக் கண்காணிக்கும் வேலைகளையும் கிராம சுகாதார செவிலியர் மேற்கொள்கிறார்.

சில நாட்களுக்கு முன்பு, நீலகிரி மாவட்டத்தில் தெங்குமரஹடா எனும் மலைக் கிராமத்தில் ஜெயமோகன் (வயது 30) என்ற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் தன் இளம் வயதில் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர் ஜெயமோகன்: கோப்புப்படம்

தான் இறக்கும் 2 நாட்களுக்கு முன்பு வரை அந்த கிராமத்துக்கு நேரில் சென்று அடிப்படை மருத்துவ உதவிகளை மருத்துவர் ஜெயமோகன் வழங்கியிருக்கிறார் என்பது ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களின் முக்கியத்துவத்தையும், அவர்களின் பணிகளையும் நமக்கு உணர்த்திவிடும்.

மருத்துவர் ஜெயமோகன் குறித்து அவரின் நண்பரும், விருதுநகர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மருத்துவருமான பிரபு மனோகரனிடம் 'இந்து தமிழ் திசை' சார்பில் பேசினோம்.

"ஜெயமோகன் திறமையான மாணவர். 2007-ம் ஆண்டில் 12-ம் வகுப்பில் மாநில அளவில் முதலிடம் பெற்றார். சென்னை மருத்துவக் கல்லூரியில்தான் மருத்துவம் படித்தார். அப்போதே அவருக்கு ஏழை மக்களுக்காகவும் மலைவாழ் மக்களுக்காகவும் பணி செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. அதனால்தான் மலைப்பகுதியில் பணி செய்தார்.

3 ஆண்டுகளாக தெங்குமரஹடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் பணி செய்து வந்தார். பரிசலில்தான் அந்த கிராமத்திற்குச் சென்று பணி செய்ய முடியும். சாலை, பேருந்து வசதி கிடையாது. அங்கு சென்றால் 2 நாட்கள் தங்கி பின்னர்தான் மேட்டுப்பாளையத்தில் உள்ள அவரது வீட்டுக்கு வருவார்.

அங்குள்ள மலைவாழ் மக்கள் எல்லோருக்குமே அவரை நன்றாகத் தெரியும். அங்குள்ள மக்களுக்கு கரோனா தொற்று குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாததால் அவர்கள் தனிமனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதுகுறித்து குடும்பத்தினர், நண்பர்களிடம் ஜெயமோகன் மிகவும் வருத்தமடைந்து பேசியுள்ளார்.

எனினும், மக்கள் மீது அன்பு கொண்டு, இறப்பதற்கு இரு தினங்களுக்கு முன்பு வரை மக்கள் பணியாற்றியுள்ளார்.

முதுநிலை மருத்துவ படிப்பு படிக்க வேண்டும் என்பதற்காக நீட் தேர்வுக்காக படித்து வந்தவர். நல்ல திறமையான மருத்துவர். கிராமத்தில் பணி செய்தவர். நிச்சயம் அவருக்கு சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலேயே இடம் கிடைத்திருக்கும்.

தெங்குமரஹடாவில் மக்களின் வீடுகளுக்கே சென்று மருத்துவம் பார்த்து வந்தார். அப்போது, போதிய முகக்கவசம், கையுறை அவருக்கு வழங்கப்படவில்லை. பிபிஇ கவசமும் அவருக்கு வழங்கப்படவில்லை" என்று, தன் நண்பரின் இறப்பு குறித்தும் இறக்கும் தருவாயிலும் அவருக்கு ஏற்பட்ட மனவேதனை குறித்தும் பகிர்ந்துகொண்டார்.

மருத்துவர் ஜெயமோகன் மட்டுமல்ல, கரோனா தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் அரசு ஆரம்ப சுகாதார நிலையப் பணியாளர்கள் பலரும் இத்தகைய நிலையில் தான் இருக்கின்றனர்.

தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில் வீடு தேடிச் சென்று மருத்துவ உதவிகளை வழங்கி வரும் வட்டார மருத்துவ அலுவலர் சவுந்தரராஜனிடம் பேசினோம்.

"ஆரம்ப சுகாதார நிலையங்களின் பணி இச்சமயத்தில் மிக முக்கியமானது. வெளிமாநில, வெளிநாட்டுப் பயணிகளை தனிமைப்படுத்தி அவர்களைக் கண்காணிக்க வேண்டும். சுகாதார ஆய்வாளர்கள் அவர்களிடம் போன் மூலம் காலை, மாலை இருவேளையும் உடல்நலன் குறித்து விசாரிப்பார்கள்.

பேராவூரணி வட்டாரம் முழுவதும் நோய்த்தொற்று ஆபத்துள்ள குழந்தைகள், வயதானவர்கள், கர்ப்பிணிகள், ரத்த அழுத்தம், நீரிழிவு, இருதய நோயாளிகளுக்கு வாகனங்களில் வந்து மாத மாத்திரைகளை நேரடியாகச் சென்று வழங்குகிறோம். ரத்த அழுத்தம், சர்க்கரை அளவையும் நேரடியாகவே சென்று சோதிக்கிறோம். இதுவரை 1,200 குடும்பங்களில் 80% மக்களிடம் பணிகளை முடித்துள்ளோம். ஆரம்ப சுகாதார நிலையங்களின் முக்கியப் பணியே நோய்த்தடுப்புதான்" என்றார்.

ஊரடங்காலும், பல தனியார் மருத்துவமனைகள் செயல்படாததாலும் ஆரம்ப சுகாதார நிலையங்களை நோக்கி வரும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது" என்கிறார் சவுந்தரராஜன்.

"ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிரசவமாகும் பெண்களின் எண்ணிக்கை இருமடங்காக அதிகரித்துள்ளது. அரசு மருத்துவமனையை மக்கள் நாடியுள்ளனர். ஆரம்ப சுகாதார நிலையங்களில் எடை குறைவான, மஞ்சள் காமாலை உள்ள, தொற்றுள்ள குழந்தைகளைக் கவனிக்கும் வசதி உள்ளது. அதைக் கவனிக்க திறன் படைத்த சுகாதாரப் பணியாளர்கள் உள்ளனர்.

மற்ற மாநிலங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை குறைவு. தமிழகத்தில் அதிகம். எல்லா ஆரம்ப சுகாதார நிலையங்களும் தமிழகத்தில் 24 மணிநேரம் இயங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளன" என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையம்: பிரதிநிதித்துவப் படம்

நகரங்களிலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு வரும் நோயாளிகளின் எண்ணிகை அதிகரித்துள்ளது என்கிறார், சென்னை, ஆலந்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் ரிஸ்வான்.

"தனியார் மருத்துவமனைகள் இல்லாததால், இங்கு வரும் கர்ப்பிணிப் பெண்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. நகரங்களில் பெரும்பாலும் தனியார் மருத்துவமனைகளுக்குத்தான் செல்வார்கள். இப்போது நிலைமை மாறியிருக்கிறது.

எனினும், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர்களுக்கு இரட்டை மடிப்பு முகக்கவசம் தான் அளித்திருக்கின்றனர். வரும் நோயாளிகளை முகக்கவசம் அணிந்து வர அறிவுறுத்துகிறோம். பயமாகத்தான் இருக்கிறது. கரோனா சந்தேகம் உள்ள நோயாளிகளை பார்க்கும்போது மட்டும்தான் பிபிஇ பயன்படுத்துகிறோம். களப்பணிக்குச் செல்லும் மருத்துவர்களுக்கு பிபிஇ தருகிறோம்" என்றார்.

ஆரம்ப சுகாதார நிலையங்களின் நிலை இதுவென்றால், ஆஷா பணியாளர்கள் தங்களுக்கென எந்தவொரு அடையாளமும் இல்லாமல், மாதம் ரூ.2,000 சம்பளத்துடன் பணிபுரிகின்றனர். பல சமயங்களில் இந்த சம்பளம் கிடைப்பது கூட சிரமம் என்கிறார், நீலகிரி மாவட்டம் கூடலூரில் உள்ள தேவர்சோலை எனும் மலைக் கிராமத்தில் ஆஷா பணியாளராக இருக்கும் சௌஜா.

கணக்கெடுக்கும் ஆஷா பணியாளர்: பிரதிநிதித்துவப் படம்

"புதிதாக கர்ப்பமாகும் பெண்களைப் பதிவு செய்வது எங்களுடைய வேலை. கர்ப்பிணிப் பெண்கள் தவிர்த்து வளரிளம் பெண்களுக்கு சத்து மாத்திரைகள் வழங்குவது, மாதந்தோறும் நாப்கின்கள் வழங்குவதும் ஆஷா பணியாளர்களின் பணிதான்.

வீடுகளில் யாருக்காவது காய்ச்சல், இருமல் உள்ளதா என்பதையும் கணக்கெடுக்கிறோம். 1,000 மக்கள்தொகைக்கு ஒரு ஆஷா பணியாளர் உள்ளனர். 'லாக் டவுன்' தொடங்கியதிலிருந்து நான் மட்டும் எனக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள 1,000 பேருக்குத் தேவையான சுகாதாரப் பணிகளைச் செய்துள்ளேன்.

பேருந்து வசதி இப்போது இல்லாததால், நடந்தே 4 கி.மீ. வரை சென்று பணி செய்கிறோம். எங்களுக்குப் போக்குவரத்து வசதி செய்து தர வேண்டும். காலை 9 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வேலை செய்ய வேண்டும்.

எங்களுக்கு முகக்கவசம் வழங்கவில்லை. நாங்கள் தான் 15 ரூபாய் கொடுத்து முகக்கவசம் தினமும் வாங்குகிறோம். அந்த முகக்கவசமும் கிடைக்கவில்லையென்றால் துப்பட்டாவைக் கட்டிக்கொண்டு செல்வோம். ஆரம்ப சுகாதார நிலையத்தில் கேட்டால் வரவில்லை என்கின்றனர்.

2,000 ரூபாய்தான் எங்களுக்கு மாத சம்பளம். அந்த ரூ.2,000 கூட தொடர்ச்சியாகக் கிடைப்பதில்லை. எங்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும். மிகவும் கஷ்டப்படுபவர்கள் இருக்கின்றனர். எங்களுக்கு என ஒரு அடையாளமோ, பாதுகாப்போ இல்லை. இப்போது என்றில்லை, எப்போதுமே அதிக பணி செய்பவர்கள் ஆஷா பணியாளர்கள்தான்.

ஒரு பெண் கர்ப்பமானதிலிருந்து குழந்தை பிறந்து 45 நாட்கள் வரை அவர்களைக் கண்காணிப்பது நாங்கள் தான். ஆஷா பணியாளர்கள் இல்லையென்றால் இந்த சமயத்தில் மிகவும் கஷ்டமாகிவிடும்.

எங்களுக்கென அடையாள அட்டை கூட இல்லை. எங்களுக்கு முன்பு சீருடை கொடுத்தனர், இப்போது அதுவும் இல்லை. இது கிட்டத்தட்ட சமூக சேவை பணிதான். ஆனால், ரூ.2000-ஐ வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது?" எனக் கேள்வியெழுப்புகிறார்.

தொடர்புக்கு: nandhini.v@hindutamil.co.in

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x