Published : 19 Apr 2020 11:32 AM
Last Updated : 19 Apr 2020 11:32 AM

''குழந்தைக்கு ரத்தப் புற்றுநோய்; மருந்துகள் தேவை'' - ட்விட்டரில் வேண்டுகோள் விடுத்த இளைஞர்; முதல்வர் பழனிசாமி உடனடி பதில்

புற்றுநோய்க்கான மருந்துகள் வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தவருக்கு உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் கரோனா வைரஸ் தொற்று உள்ளவர்களின் எண்ணிக்கை 1,372 ஆக அதிகரித்துள்ளது. இதனைக் கட்டுப்படுத்த ஊரடங்கும் அமலில் இருக்கிறது. மேலும், ரேபிட் கிட்ஸ் தமிழகம் வந்துவிட்டதால் அதிகப்படியான டெஸ்ட்டிங் பணிகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது.

பொதுமக்களும் வீட்டிற்குள்ளேயே இருப்பதால், அவர்களுக்குத் தேவையான அத்தியாவசிய பொருட்களும் தடையின்றிக் கிடைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. மேலும், ட்விட்டர் தளத்தில் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறையினர் ஆகியோரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் உதவிகளும் உடனடியாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன.

சில சமயங்களில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டுக் கேட்கப்படும் உதவிகளும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. அவ்வாறு இன்று (ஏப்ரல் 19) காலை கோகுல் சங்கர் என்பவர் தமிழக முதல்வரின் ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு, "இந்தக் குழந்தைக்கு ரத்தப் புற்றுநோய் மருந்துகள் சென்னையில் உள்ள ICHமருத்துவமனை மூலம் கொடுக்கப்படுகிறது.

மருந்து தற்போது தீர்ந்துவிட்டது, தற்பொழுது உள்ள சூழ்நிலையால் பெற்றோரால் சென்று மருந்து வாங்க முடியவில்லை. தயவுகூர்ந்து மருந்துகள் பெற்றோரைச் சென்றடைய வேண்டுகிறேன். நன்றி" என்று தெரிவித்தார்.

இந்த ட்வீட்டுடன் தேவைப்படும் மருந்துகளின் பெயர்கள் அடங்கிய கடிதங்கள் மற்றும் புகைப்படத்தையும் பதிவிட்டார்.

இந்த ட்வீட்டுக்குப் பதிலளிக்கும் விதமாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "இந்த சின்னஞ்சிறு வயதிலேயே நோயை எதிர்த்துப் போராடும் இக்குழந்தை விரைவில் பூரண குணமடைந்து நலம்பெற வேண்டிக் கொள்கிறேன். இக்குழந்தைக்குத் தேவையான அனைத்து மருந்துகளும் கிடைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x