Published : 19 Apr 2020 08:06 AM
Last Updated : 19 Apr 2020 08:06 AM

காலை 6.31-க்கு போன் வந்தா அவரேதான்...

‘இந்து தமிழ்' நாளிதழ் நாளிதழ் வெளியான முதல் நாளிலிருந்து வாசிக்கத் தொடங்கிய வாசகர்களைப் பற்றி, நமது முகவர்கள் நினைவுகூரும் பகுதி இது. இன்று நெல்லை கோடீஸ்வரன் நகர் முகவர் இ.சண்முகம் பேசுகிறார்...

"டவுன் ஆ.தியாகராஜன் சார்வாள்கிட்ட இருந்து போன் வந்துச்சின்னு வைங்க, மணி 6.31-ன்னு அர்த்தம். 'என்ன தம்பி இன்னமும் பேப்பர் வரல?'ன்னு கேட்பாங்க. பேப்பரை கையில வாங்கும்போதே, 'என்ன எடை கம்மியா இருக்கு சப்ளிமென்ட் வெக்கலியா?'ன்னு கேட்கிற அளவுக்கு பேப்பரோடயே புழங்குனவங்க அவங்க. அறுபது வருஷமா ‘தி இந்து’வும், ஏழு வருஷமா ‘இந்து தமிழ்’ பேப்பரும் படிக்கிறாங்க. ஒரே ஒரு நாள் வெளியூர் போனாலும் சரி, ஒரு வாரத்துக்கு முன்னாடியே 'யப்பா, நான் இத்துனாம் தேதி ஊருக்குப் போயிட்டு இத்துனாம் தேதிதான் வருவேன். பேப்பரை பத்திரமா எடுத்துவெச்சிட்டு நான் வந்ததும் கொண்டாந்து தந்துடு. உனக்கும் நஷ்டம் வரக்கூடாது, நானும் படிச்ச மாதிரி இருக்கணும் சரியா?'ம்பாங்க.

சொன்ன மாதிரியே அத்தனை பேப்பரையும் தேதிவாரியா படிச்சிடுவாங்க. 'ஏன் சார்... பழைய பேப்பரைப் போய் பரீட்சைக்குப் படிக்க மாதிரி படிக்கீய?'ன்னு கேட்டாப்போதும், '1968-ல திண்டு க்கல்ல பஸ் ஸ்டாண்டல இந்து பேப்பரை வாங்கிட்டு பஸ்ல படிச்சிட்டே மதுரைக்கு டிஎன்பிஎஸ்சி பரீட்சைக்குப் போனேன். 40 கேள்வி இந்து பேப்பர்ல இருந்து மட்டும் வந்துச்சி. அப்படித்தான் சார் பதிவாளரானேன். ஒரு நாள் பேப்பர்ங்கிறது சாதாரண விஷயம் கெடையாது, கேட்டுச்சா?' என்பாங்க.

'தி இந்து மாதிரியே தமிழ்ல ஒரு பேப்பர் வந்தா எப்டியிருக்கும்னு நான் கண்ட கனவு நிறை வேறிடுச்சி'ன்னு தமிழ் இந்துவை கொண்டாடுவாங்க சார்வாள். பக்கத்து வீடுகள்லேயும், 'ஏல என்ன பேப்பர் வாங்குதீய... அதுல கொலை, கொள் ளைச் செய்திதான போடுவாம்? பேசாம இந்துப் பேப்பர் வாங்கு. உம் பிள்ளையளாவது கலெக்டரா வட்டும்'ன்னு சொல்வாங்க" என்கிறார் சண்முகம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x