

உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் மனுக்களை திரும்பப்பெற, நோட்டரி வழக்கறிஞரிடம் கடிதம் பெற்று தாக்கல் செய்ய வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
உயர் நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கலான மனு ஒன்றினை திரும்பப் பெறுவதாக வழக்கறிஞர் சார்பில் உயர் நீதிமன்ற பதிவாளரிடம் கடிதம் அளிக்கப்பட்டது. அந்த கடிதத்தின் அடிப்படையில் சம்பந் தப்பட்ட மனுவின் எண், விசாரணை பட்டியலில் சேர்க்கப் பட்டது. அந்த மனு நீதிபதி எஸ்.வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தபோது, மனு தாரரின் வழக்கறிஞர் ஆஜராகி, ‘தாங்கள் மனுவை திரும்ப பெறுவதாக பதிவாளரிடம் எந்த கடிதமும் வழங்கவில்லை. அந்த கடிதத்தில் இடம் பெற்றிருப்பது எங்களது கையெழுத்து இல்லை. எங்கள் கையெழுத்தை போலியாக போட்டு பதிவாளரிடம் கடிதம் கொடுக்கப்பட்டுள்ளது’ என்றார்.
இதையடுத்து நீதிபதி பிறப் பித்த உத்தரவு: மனுவை திரும்பப் பெறும்போது சிலர் இதுபோன்ற மோசடியில் ஈடுபடுகின்றனர். இந்த மோசடியை தடுப்பதற்கு, இனிமேல் மனுக்களை திரும்ப பெற கடிதம் அளிக்கும் போது, அந்த கடிதத்தில் மனுதாரர், அவரது வழக்கறிஞர் ஆகியோர் சம்மதம் தெரிவித்து கையெழுத்திட்டிருக்க வேண்டும்.
மேலும், அதனுடன் நோட்டரி வழக்கறிஞரின் சான்றினையும் இணைத்து தாக்கல் செய்ய வேண்டும்.
இந்த புதிய நடைமுறை பணிகளில் சற்று தாமதம் ஏற்படுத்தினாலும், இதுபோல் போலி கடிதங்கள் தாக்கல் செய்வது தடுக்கப்படும். இனிமேல் மனுவை திரும்ப பெறுவதாக இருந்தால், இந்த நடைமுறையை உயர் நீதிமன்ற பதிவாளர் பின்பற்ற வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார்.