கரோனா தடுப்பு: ஓசூர் பேகேப்பள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு

கரோனா தடுப்பு: ஓசூர் பேகேப்பள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிப்பு
Updated on
1 min read

தமிழக எல்லை நகரமான ஓசூர் வட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேகேப்பள்ளி கிராமம் தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ஓசூர் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சிப்காட் - 1 பகுதியில் ஜுஜுவாடி அருகே பேகேப்பள்ளி கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராம ஊராட்சிக்கு உட்பட்ட 7 கிராமங்களும் தனிமைப்படுத்தப்பட்டு ஊருக்குள் யாரும் வந்து செல்லாத வகையில் தடுப்புகள் அமைத்து தீவிர கண்காணிப்பில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே கிராமத்தில் தண்டோரா போடப்பட்டு தீயணைப்பு வாகனம் மூலமாக கிருமி நாசினி தெளிப்பு மற்றும் மருத்துவ குழுவினர் வீடு வீடாக சென்று பரிசோதனை மற்றும் கணக்கெடுப்பு பணியை மேற்கொண்டுள்ளனர்.

இதுகுறித்து ஓசூர் வட்டாட்சியர் வெங்கடேசன் கூறியதாவது:
''ஓசூர் வட்டம் பேகேப்பள்ளி தரப்பு மற்றும் கிராமத்தில் கரோனா வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பேகேப்பள்ளி கிராமம் 18-ம் தேதி முதல் முற்றிலும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கிராமத்தில் உள்ள 3ஆயிரம் வீடுகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசிய உணவுப்பொருட்களை அவர்களது வீட்டிற்கே சென்று வழங்க தனிக்குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த கிராமத்தில் வருவாய்த்துறை கட்டுப்பாட்டில், காவல்துறையினரின் பாதுகாப்பிலும், ஊரக வளர்ச்சித்துறையினர், சுகாதாரப்பணி துறையினர் மற்றும் மாநகராட்சி பணியாளர்கள் என மொத்தம் 150 பேர் 24 மணிநேரமும் கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இங்குள்ள 50 வீடுகளுக்கு ஒரு செவிலியரும் 10 செவிலியர்களுக்கு ஒரு மருத்துவரும் என மருத்துவ குழுக்கள் பிரிக்கப்பட்டு வீடுகள்தோறும் மருத்துவப் பரிசோதனை மற்றும் கிருமி நாசினி தெளிப்பு, முகக்கவசம் வழங்கல் உள்ளிட்ட கரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை பணிகள் நடைபெற்று வருகின்றன.

ஆகவே பேகேப்பள்ளி கிராமத்தில் உள்ள பொதுமக்கள் முழுமையாக ஊரடங்கைக் கடைபிடித்து வெளியே வராமல் சட்டம் ஒழுங்கு பாதிக்காத வகையிலும் மேலும் மிகவும் நெருக்கடியான தருணங்களில் பொதுமக்கள் வெளியே வர நேரிடும் போது இருசக்கர வாகனத்தில் ஒரு நபரை மட்டும் அனுமதிக்கவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.''
இவ்வாறு அவர் கூறினார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in