

அரியலூர் நகரில் கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூரண குணமடைந்ததையடுத்து மருத்துவர்கள் கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
அரியலூர் நகரைச் சேர்ந்த 25 வயது பெண் ஒருவர் சென்னை வேளச்சேரியில் உள்ள ஒரு மாலில் பணியாற்றிய போது காய்ச்சல் தொற்று ஏற்பட்டதையடுத்து, அவர் அரியலூரில் உள்ள தந்தை வீட்டுக்கு கடந்த மாதம் வந்தார். தொடர்ந்து, இருமல், சளி காரணமாக மார்ச் 20-ம் தேதி அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
இதனையடுத்து, அவர் மருத்துவமனையில் உள்ள கரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு தொடர்ந்து மருத்துவர்களால் கண்காணிக்கப்பட்டு உரிய சிகிச்சை அளிக்கப்பட்டது.
சிகிச்சையில் பூரண குணம் அடைந்ததையொட்டி இந்த பெண்ணை இன்று (ஏப்.18) மருத்துவர்கள் கைத்தட்டி வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
மருத்துவமனையில் இருந்து புறப்பட்ட அவருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் கோட்டாட்சியர் ஜெ.பாலாஜி மலர்கொத்தினை வழங்கினார். மருத்துவக் கல்லூரி முதல்வர் முத்துகிருஷ்ணன், சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் சி.ஹேமசந்த்காந்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநிவாசன் ஆகியோர் பழங்கள் மற்றும் பரிசுகளை கொடுத்தனர். இதையடுத்து அவரை அனைவரும் கைத்தட்டி ஆம்புலன்ஸ் வாகனத்தில் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தன்னை குணப்படுத்திய மருத்துவர்களை கையெடுத்து கும்பிட்டபடி அந்த பெண் ஆம்புலன்ஸில் வீட்டுக்கு சென்றார்.
டிக் டாக்கில் ஆர்வம் கொண்ட அந்த பெண் கரோனா தொற்றுக்கு பிறகு சில சோக பாடல்களுக்கு தனது நடிப்பை காண்பித்து வீடியோ வெளியிட்டார். பின்னர், கரோனா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வீடியோ வெளியிட்டார்.
வீட்டுக்குத் திரும்பும் நிலையிலும் தான் மருத்துவமனையில் இருந்தபோது வரைந்த ஓவியங்கள், எழுதிய கவிதைகள், டைரி குறிப்புகள், தான் உண்ட உணவு ஆகியவற்றை பதிவு செய்து, தான் குணமாகியது போல் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட அனைவரும் விரைவில் குணமாகி வந்து விடுவீர்கள் என்றும் பதிவு செய்துள்ளார்.
கரோனா பாதிப்புக்கு முன்பு அவரை 300 பேர் பின் தொடர்ந்தனர். இப்போது மூவாயிரத்துக்கும் மேற்பட்டோர் அவரை பின் தொடர்கின்றனர்.
டெல்லி மாநாட்டுக்கு அரியலூர் மாவட்டத்திலிருந்து 5 பேர் சென்ற வந்ததில் ஒருவருக்கு கரோனா தொற்று இருந்து, திருச்சியில் சிகிச்சை பெற்று வந்த அவர் பூரண குணமடைந்து நேற்று முன்தினம் வீடு திரும்பினார். அரியலூரில் சிகிச்சை பெற்று வந்த பெண் பூரண குணமடைந்து நேற்று வீடு திரும்பினார். அரியலூர் மாவட்டத்தில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு பேரும் குணமடைந்ததால், அரியலூர் மாவட்டம் தற்போது கரோனா வைரஸ் தொற்று இல்லாத மாவட்டமாக உள்ளது.