நாகர்கோவிலில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு தயார் நிலையில் 1000 கவச உடைகள்: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை

நாகர்கோவிலில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபடும் தூய்மைப் பணியாளர்களுக்கு தயார் நிலையில் 1000 கவச உடைகள்: ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடியவை
Updated on
1 min read

நாகர்கோவிலில் கரோனா தடுப்புப் பணியில் ஈடுபட்டு வரும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் 1000 கவச உடைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

கன்னியாகுமரி மாவட்டத்தில் கரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதுவரை 741 பேர் கரோனா நோய்தொற்று குறித்து சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளனர்.

இதில் 16 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு அவர்களுக்கு ஆசாரிபள்ளம் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை கரோனா வார்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் குமரி மாவட்டம் முழுவதும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி என உள்ளாட்சி அமைப்பினரும், தூய்மை பணியாளர்களும் கரோனா தடுப்பு பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

நாகர்கோவில் நகராட்சி தூய்மை பணியாளர்கள், மாநகராட்சி சுகாதார பணியாளர்களுக்கு ஏற்கெனவே 500-க்கும் மேற்பட்ட கவச உடைகள் விநியோகம் செய்யப்பட்டு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்தாலோ, மற்றும் தடுப்பு நடவடிக்கையை மேற்கொள்ளவோ கூடுதல் கவச உடைகள் தேவைப்பட்டால் அவற்றை தயார் நிலையில் வைக்கும் வகையில் மாநகராட்சியினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

இதற்காக ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் 1000 கவச உடைகள் தயார் செய்ய திருப்பூரில் உள்ள ஆயத்த ஆடை நிறுவனத்திற்கு நாகர்கோவில் மாநகராட்சியினர் ஆர்டர் செய்திருந்தனர்.

இந்த 1000 ஆயத்த ஆடைகளும் நாகர்கோவில் மாநராட்சி அலுவலகத்திற்கு வந்தது. அத்துடன் கைகளை சுத்தப்படுத்தும் சானிடைசரும் 1000 லிட்டர் வந்து சேர்ந்தது.

இவற்றை நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் சரவண குமார், மற்றும் அலுவலர்கள் பார்வையிட்டனர். ஒரு முறைமட்டுமே பயன்படுத்தும் கவச உடைகளை தூய்மை பணியாளர்கள், கரோனா குறித்த கணக்கெடுப்பு பணியில் ஈடுபடும் சுகாதார பணியாளர்கள் பணியின் அவசர தேவை கருதி பயன்படுத்த உள்ளனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in